அனிச்சப் பேச்சில் அனைவரும் ருசிக்க -பெ.தமிழ்ச்செல்வி.
கலைப் பொக்கிஷம்
என்.எஸ்.கிருஷ்ணன்
அதிராத வார்த்தைகளில்
அகிலம் ரசிக்க நகைச்சுவை!
அனிச்சப் பேச்சில்
அனைவரும் ருசிக்க வில்லுப்பாட்டு!
உற்சாகப் பார்வையில்
உலகம் சீர்பட கதாகாலட்சேபம்!
உளம் மகிழ்ந்து உதவுதலில்
MGR க்கே வழிகாட்டிய கொடைவள்ளல்!
தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின்!
காந்திஜிக்கு நினைவுத்தூண் எழுப்பி
மானுட இதயத்தில் நிலை கண்டவர்!
சொல்லாடல் ஜதி மன்னன் புகழ்
நடராஜா கல்வி கழக கல்வெட்டாகி
கலைவாணர் பட்டமென மகுடமானது!
எழுத்து மை வடிவ எழுதுதலில்
தொடும் மைகளென....
பொறுமை/பொறாமை/தற்பெருமை/
பழமை/நேர்மை/புதுமை சொல்லி,
தொடக் கூடாத மைகளென....
மடமை/கயமை/பொய்மை/
வேற்றுமைகளை உணர்த்தி,
நீங்க வேண்டிய மைகளென...
வறுமை/ஏழ்மையை
எழுத்தாளர்களுக்காக
எடுத்துரைத்த எண்ணம் நிறைந்தவர்!
தீண்டாமை/மதுவை எதிர்த்து,
நிலம் அனைவருக்குமான பங்கீடுடன்
மாற்றாரை மதிக்கும் மனிதநேயம்,
எதிர்கால அறிவியல்/விஞ்ஞானம்
கணித்து பாடலிலே வகுத்த ஞானியவர்!
கலைஞரிடம் பற்றுடன்
சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் தந்தவர்!
பச்சையப்பன் கல்லூரி
மாணவரிடையே
மகிழ்வில் நாயும் வாலாட்டும்...மனிதன்
மட்டுமே நல்ல மனசிருந்து சிரிப்பவன்
என பேசி சிரிப்பின்
தத்துவம் சொன்னவர்!
இலட்சுமிகாந்தன் கொலைவழக்கில்
30 மாதங்கள் சிறை வாழ்க்கை!
இலட்சியம் தவறாமல்
150 படங்களில் நடிப்பு,
50 பாடல்கள் சொந்தக் குரலில் படைப்பு,
எனும் முத்தாய்ப்பில் முகிழ்த்தவர்!
முதல் மணம் மறைத்தமைக்கு
வினா எழுப்பிய துணைவியிடம்
ஆயிரம் பொய் அவனவன் செய்திட
ஒரு பொய் தப்பாகாதென
தவறினில் கூட நகைச்சுவை பதித்தவர்!
மகளிர் கூட்டத்தில்.....
சூடுவது நாளை வாடும் பூ
நிறைவது முகம் மலர் சிரிப்பு
வளம் தருவது சேமிப்பு
என பூவையர்க்கு பூ விளக்கமளித்தவர்!
நாடக கொட்டகைகளில் சோடா விற்று
உழைப்பினால்/ஆர்வத்தினால்
நாடகக் கம்பெனி முதலாளியாகும்
கலைவாணி அருள் பெற்றவர்!
சீர்திருத்தக் கருத்துகளை
செம்மையுற நகைச்சுவையால்
தமிழர்கள் மனதில் பரப்பிய
கலைவாணர்
சுடலைமுத்து கிருஷ்ணன்
29.11.1908 ல் பிறந்து
30.08.1957 ல் மறைந்தாலும்
நீங்கா நினைவுகளால்
நம்மிடையே இன்றும் வாழ்கிறார்!
என்றும் வாழ்ந்திடுவார்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728
Comments
Post a Comment