நாடு முழுவதும் பெரிய அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்க ஏத்தர் தீவிரம்...
சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் ஏத்தர் நிறுவனம் தீவிரமாக களமிறங்கி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை வைத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமாக துவங்கப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகன உற்பத்தியில் ஜாம்பவான் நிறுவனங்களுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த ஏத்தர் நிறுவனம் தற்போது நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், வர்த்தகத்தை வலுவாக்கும் விதத்தில், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா,"முக்கிய நகரங்களில் அதிக அளவில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
ஒவ்வொரு நகரத்திலும் 12 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகிறோம். டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 புதிய சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைத்துவிடுவோம்," என்று கூறி இருக்கிறார்.
சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைப்பதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதையும் மறுக்க இயலாது. ஃபாஸ்ட் சார்ஜரிலிருந்து சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் தொழில்நுட்பத்துடன் எமது நிலையங்களை அமைப்பதற்கு முடிவு செய்தததால், இந்த தாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இதனை 20 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.
இது சாத்தியமானால், ஒரு நிமிடத்தில் 4 கிலோமீட்டர் பயணிப்பதற்கான சார்ஜை உரிமையாளர் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 2,000 முதல் 3,000 சார்ஜ் ஏற்றும் நிலையங்களுடன் செயல்படுவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று தருண் மேத்தா கூறி இருக்கிறார்.
Comments
Post a Comment