முகத்தில் கலையாத சிரிப்பு -பெ.தமிழ்ச்செல்வி.
ஆசான்களுக்கு கடன்பட்டவள் நான்!
(1)
கங்காதரா நடுநிலைப்பள்ளி......
பெற்றோரின் கை விடுத்து,
அழுதபடி திரும்பித் திரும்பி பார்த்து,
துவங்கிய முதல்வகுப்பு
கல்விப்பயணம் துவக்கமது!
"காந்தி டீச்சர்" அரிச்சுவடியை....
அ னா/ஆ வன்னாவை...
மணலில்/புளியங்கொட்டையில்
கற்றுத் தந்த திறமையுடன்!
முகத்தில் கலையாத சிரிப்பு
கோபப்பட்டு பேசாத நளினம்
அலட்டல் இல்லாத ஆளுமை
மனம் புண்படாத கடிதல்....
இத்தனையும் என் குருபக்தியாய்
மனதுள் நிறைந்த
கடன் பட்ட நெஞ்சத்துடன்!
(2)
A for apple/B for ball
இதனை மூன்றாம் வகுப்பில்
அண்டைமொழியென அறிய வைத்த,
மருவினை உதடு மேல் கொண்ட
"மனோன்மணி ஆசிரியை"!
உணர்வோடு உறைந்த கடமை
காலந் தவறாமை.....பாடத்தைப்
பாடலாக மனனம் செய்வித்த திறமை,
அத்தனைக்கும் சொந்தமான,
M.A. ஆங்கிலம் நான் படிக்க
தூண்டுகோலான வழிகாட்டிக்கு,
ஆத்மார்த்தமான கடன் பட்டவளாக!
(3)
இரட்டைக்கோடு/நான்கு கோடு
கையெழுத்து நோட்டில்
அழகுற அடித்தலின்றி எழுத,
வாய்ப்பாடு/மனக்கணக்கில்
கவனச்சிதறல் காண விடாமல்,
முதல் பாராட்டு/முதல் பரிசு
பேச்சுத்திறனில் பெற தூண்டிய
"ஜேம்ஸ் ஆசிரியர்"!
வீட்டுப்பாடம் எழுத தவறாமை,
தவறுகளை நிமிண்டலால் திருத்தி,
திறமைகளை ஊக்குவித்த ...அந்த
நல் ஆசானுக்கு கடமைப்பட்டவளாக!
(4)
ஆலமர விசால அறிவுடன்
ஏழாம் வகுப்பு"சாந்தா ஆசிரியை"!
எட்டாம் வகுப்பு"மின்னி ஆசிரியை"!
எண் கணிதம் போதித்து,
உண்டி சேமிப்பை உணர வைத்து,
ராணி/அம்புலி மாமா/படிக்க தூண்டி,
ஆறாம் அறிவை அழகாய் வளர்த்து,
ESSLC தேர்ச்சி அடைய செய்த
அழகு தேவதைகளுக்கு கடனாளியாக!
(5)
சிறுமலர் மடம் உயர்நிலைப்பள்ளி.....
9 மற்றும் 10 ஆம் வகுப்பு...
இலக்கணம்/இலக்கியம்/ உவமை/
அடுக்குத் தொடர்/இரட்டைக்கிளவி/
எதுகை/மோனை...அத்தனையையும்
அறிய வைத்த
"ராஜேஸ்வரி ஆசிரியை"க்கும்....
டேன் /காஸ்/சைன் தீட்டாக்களை/
வாழ்க்கை தியரம்களை/
அலர்ஜி அல்ஜிபிராவை
பத்தாவதோடு என்னை கழட்டி
ஓரம் கட்ட வைத்து...
"வாழ்க்கை என்பது கணக்குகளல்ல...
கணக்குகளின் விடைகள்" என
இன்பத்தைக் கூட்டி/துன்பம் கழித்து/
அன்பினை பெருக்கி/
பண்பினை வகுக்க உதவிய
கணிதம் போதித்த...
"புவனா ஆசிரியை"க்கும்....
படங்களோடு பாடங்கள் பதிதல்,
ஐம்புலன்களின் அறிவியலோடு,
உயிருள்ளவை/உயிரற்றவை/
உடல் உறுப்பு /அமைப்புடன் பணிகள்/
டார்வின்/லமார்க் கோட்பாடு/
நெம்புகோல் தத்துவம்...
இத்தனையையும் இம்மி பிசகாமல்
கற்றுத் தந்த அறிவியல் ஆசான்...
"வருவேல் ஆசிரியை"க்கும்...
நேர்த்தியான ஆடை அணிதல்,
கலையாமல் இரட்டை ஜடை போடுதல்,
நல் ஒழுக்கம் கடைப்பிடித்தல்...
இவைகளை உணர வைத்த
"சிஸ்டர் மஞ்சுளா" விற்கும்
நான் ஆயுசுக்கும் கடன்பட்டவளாக!
(6)
வித்வ ரத்ன வில்லா மேனிலைப்பள்ளி...
11 & 12 வகுப்புகள்....
கண்டிப்பு பிரம்மாயுதம் தொடுத்து,
களர்நில வாய்க்காலில்
வளர்நில அறிவு பாய்ச்சி,
என் வாழ்வினைச் செதுக்கிய
சிற்பிகளாக....ஆசிரியைகள்
"மனோரஞ்சிதம்/ஷீலா/விஜயா"!
மூவருக்கும் நான் கடன்பட்டவளாக!
(7)
அறிஞர் அண்ணா கல்லூரி......
என் சிந்தைகளை செம்மையாக்கி,
வாழ்வின் எதார்த்தங்களை அறிவித்து,
வளமைத் திசைகளை பி.எஸ்ஸி
வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டி,
திறன்கள் நிரம்பிய தியாகத்தின்
செம்மல்களாய்..பேராசிரியைகள்
"ஐடா புஷ்பம்/கே.பிரேமா/டி.பிரேமா"!
நான் இத்தனை உச்சம் தொட
ஏணிப்படியாய்...என்
விடியலுக்கான விளக்கொளியாக,
என்னை வானேற்றி விட்டு
வெறும் வரப்பாக நின்று
வழியனுப்பிய இவர்களுக்கும்
ஜென்மம் முழுக்க கடனாளியாக!
.................(8)
ஈரோடு/அலமேலு அங்கப்பன் கல்லூரி...
எத்திசையும் தெரியாதிருந்த எனக்கு
எண்திசையும் அறிய வைத்து,
ஆவல் கொண்டே ஆசிரியப்பணி
மேற்கொள்ள வைத்த,
நம்பிக்கை வேரினை மனதில் ஊன்றி,
விடாமுயற்சி நீர் பாய்ச்சி,
ஊக்கமென்னும் உறவு தந்து,
பண்புமிக்கவளாய்/நெளிவு சுளிவு
அறிந்தவளாய் புடம் போட்டவர்கள்....
எம்.எஸ்ஸி பட்டயப் படிப்பின்
பேராசிரியப் பெருமக்கள்....
"சரஸ்வதி/ஆண்டாள்/வித்யா" எனும்
முத்தேவியருக்கும் நான் கடன்பட்டவளே!
ஆசிரியப் பெருமக்கள்....
எத்தனை அன்பு!
ஊத்தனை அறிவுரை!
எத்தனை அரவணைப்பு!
எத்தனை ஆலோசனை....
அத்தனையும் எனக்கு அளித்தது
அவர்களின் சொத்துக்களாக!
நீங்கள் அனைவருமே
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
செதுக்கத் தெரிந்த சிற்பிகளே!
உங்கள் நோக்கம்/லட்சியம்
மாணவர்களை முன்னேற்றுவதே!
அறிவிலி மாணாக்கரை
ஒவ்வொரு வருடமும்
பத்து மாதம் சுமந்து,
அறிஞனாக பிரசவிப்பவர்கள்!
கூட்டுப்புழுவாகவுள்ள சீடர்களை
வண்ணத்துப்பூச்சியாக
பரிணமிக்கச் செய்பவர்கள்!
ஆசிரியரே!
உங்கள் விரல்கள் பிடிக்க
வித்தை பயின்றேன்!
வினாக்கள் எழுப்பி
ஞானவிழி திறந்தீர்!
ஆசிரியர்கள்!
கரும்பலகை/சுண்ணக்கட்டி வைத்தே
தன்னிடம் வந்த மாணவன்
வருங்காலத்தை ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள்!
நல்லன மட்டும் போதிப்பவர்கள்!
தன்னலமில்லா தகைமையாளர்கள்!
வகுப்புத் தோழிகள் பெயர்கள்
மறந்திருக்க..
இவர்கள் பெயர்கள் மட்டும்
பசுமரத்தாணியாக பதியச் செய்தவர்கள்!
இதயம் நிறைந்த நன் நன்றிகளை,
இப்பிறவியில்,
ஆழ் மனதிலிருந்து எழும்பும்
கைகூப்புதலோடும்,
இனி எப்பிறவி எடுத்தாலும்
அப்பிறவியிலும்
கடன்பட்டவள் எனும் நினைப்புடனே
கை தொழுது நன்றி சமர்ப்பிக்க
எண்ணிடும்....
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment