கந்தர் அலங்காரம் என்பது கந்தனுக்கு அலங்காரம் என்று பொருள்படும் - கவிஞர் ச.இலக்குமிபதி.

நல்லவர்களுக்கு கோபம் வந்தால் கல்லால் அடிக்க மாட்டார்கள் சொல்லால் அடிப்பார்கள்!



அப்படித்தான் ,அருணகிரிநாதர் பொருளின் மீது ,சேர்த்து வைத்த பணத்தின் மீது ,அழுத்தமான பற்றை வைத்திருப்பவர்களைப்பார்த்து, மதியிலி காள் !  என்று அழைக்கிறார்!


பின்பு இரக்கம் வருகிறது அவருக்கு! பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு வாழத் தெரியாமல் இருக்கின்றீர்களே என்று அவர்களைப் பார்த்து இரக்கப்படுகிறார்!!கோழிக் கொடி யானுடைய அடியை பணிந்து அருள் பெற்றால் இந்த குவலயத்தில் நல்லபடி வாழலாம் !



அப்படி வாழ தெரிந்து கொள்ளாதவர்கள்  மதியிலிகள் என்பது அருணகிரிநாதர் உடைய கருத்தாக இருக்கிறது!கோழிக் கொடியன் யார் ?


முருகப்பெருமான்! அவருடைய திருவடிகளை பணியாமல் இந்த உலகத்தில் வாழ விரும்புகிறவர்கள் புத்தி அற்றவர்கள் என்பது அவருடைய கருத்து!


பதினைந்தாம் நூற்றாண்டில், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலத்தில், தோன்றிய அருணகிரிநாதருக்கு முருகன் நேரடியாக வந்து திருக்காட்சி தந்து ,அவன் நாவிலே வேல் கொண்டு எழுதினார் !



திருப்புகழ் ,கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், மயில் விருத்தம், சேவல் விருத்தம் போன்ற எண்ணற்ற புகழ்பெற்ற நூல்களை அவர் படைத்தார்!


கந்தர் அலங்காரம்என்பது கந்தனுக்கு அலங்காரம் என்று பொருள்படும்! கந்தனுக்கு அலங்காரம் செய்து அழகு பார்ப்பவர்கள் நாம்!


கோயில் எழுப்பி கும்பிட்டு அவன் அருளைப் பெறுபவர்கள்நாம் !அருணகிரிநாதரும் சொல்லால் ஒரு அழியா ,அழகு கோயில் கட்டுகிறார்!!


கந்தர் அலங்காரம் 100 பாடல்களைக் கொண்டது !காப்புப் பாடல் மற்றும் பயன் தருகிற விதங்களை விவரிக்கிற பாட்டு ஒன்று !



பிறப்பாடல்கள் ஆறு என மொத்தம் 108 பாடல்களைக் கொண்டது! அதில் இருபதாவது பாடலை இன்று நாம் சிந்திப்போம்!


கோழிக் கொடியன் அடி பணியாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி காள்!! உங்கள் வல்வினைநோய் ஊழிற் பெரு வலி உண்ண ஒட்டாது! உங்கள் அத்தம் எல்லாம் ஆழப் புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே!!!


முருகனை கும்பிடாமல் வாழ்க்கை இல்லை !அப்படி வாழ நினைத்தால் மதி இருப்பதாகவே அர்த்தமில்லை!!



உங்கள் தீவினை நோய் ஆகிய விதியிலே பெரு வலிமையுடைய பகுதி நீங்கள் சேமித்த பொருளை உண்ணும்படி உங்களை விடாது !


உண்ணாமல் உறங்காமல்பணத்தை சேர்த்து வைத்து, நிலத்தில் ஆழமாய் புதைத்து வைத்த பணம் ஏதும் உங்களுக்குப் பின்னால் வராது?


முருகனை கும்பிட்டால் குவலயத்தே நல்லபடி வாழலாம் !சேமிக்கும் பொருளை உண்ணலாம் !புதைத்து வைக்காமல் பிறருக்கும் கொடுக்கலாம்!


அதன் பயனாக விளையும் புண்ணியம் தொடர்ந்து வரும் என்பதே இதன் மறைமுகப் பொருளாகும்!!



நீல சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் நமக்கு அருள் புரிந்திட என்கிற நம்பிக்கையோடு வாழ்வோம்!


- கவிஞர் ச.இலக்குமிபதி.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.