குளிர் வாட்டிய மயிலுக்கு போர்வை வழங்கிய பேகனிடம் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
அன்பும் மனிதமும்
அன்பே பிரதானமென கை கோர்த்து
இது தான் நேசமென பறை சாற்றும்
உளமுள்ள மனிதமே மகானாகும்!
அன்பு மனிதமானது.....
வழி தடுத்த முல்லைக்கு
தேர் அளித்த வேள்பாரியிடம்!
குளிர் வாட்டிய மயிலுக்கு
போர்வை வழங்கிய பேகனிடம்!
மூப்பின்றி நீள்நாள் வாழ ஔவைக்கு
நெல்லி ஈந்த அதியமானிடம்!
தாய்ப்பசு நீதி காண தேர்க்காலுக்கு
மகனை வைத்த மனுநீதியிடம்!
பன்றிக்கறி படைத்ததோடு சிவனுக்கு
தன் கண் அப்பிய திண்ணனிடம்!
புறாவின் எடைக்கு நிகராக
பருந்துக்கு தன் சதை தந்த சிபியிடம்!
மும்மாரி மழை கேட்டு ரங்கனுக்கு
தன்னை அர்ப்பணித்த ஆண்டாளிடம்!
மண்ணுயிர் காக்க தன்னுயிர் மறந்து
சேவைகளாற்றும் மருத்துவர்/காவலர்/
செவிலியர்/துப்புரவாளரிடம்!
தெருவோர தொழுநோயாளிகளை
அரவணைத்த தெரசாவிடம்!
பசித்த வயிற்றுக்கு புசிக்க
உணவளித்த வள்ளலாரிடம்!
6000 பள்ளிகள் திறந்து
கல்விக்கண் திறந்த காமராசரிடம்!
சுற்றம் ஒதுக்கிய குழந்தை/முதியோர்
நெறிவாழ்வு காணும் இல்லங்களிடம்!
விழிகளுக்குள் அன்பிருக்கும் வரை...
இரக்கம்/கருணை/ஜீவகாருண்யம்/
பந்தம்/பாசம்/விசுவாசம்/காதல்/
பக்தி/அருள்/அபிமானம்...எனும்
அத்தனை வடிவிலும்
மனிதம் பரிணமிக்கும்!
மானுடம் வாழ வழி பிறக்கும்!
அன்பும் மனிதமும் இயைந்த
அகிலம் காண விழையும்.....
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728.
Comments
Post a Comment