நான் மட்டுமே நூலகர் அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்து விடுவேன் - கவிஞர் ச.இலக்குமிபதி.
அள்ளட்டுமா?மொள்ளட்டுமா?
1970களில் அன்றாடம் அருகில் இருக்கும் அணைக்கட்டு என்னும் பேரூருக்கு யாம் போய் வருவது வழக்கம்!
வயதில் மூத்தவரான வாத்தியார் பரமசிவமும் ,என் சக வயது நண்பர் ராமலிங்கமும் என்னுடன் வருவது வழக்கம்!!
அணைக்கட்டில் காந்தி டீக்கடையில் அருமையான கீரை போண்டாவும் ,சூடான டீயும் அருந்திவிட்டு, பக்கம் இருக்கும் நூல்நிலையம் போவது எம் அன்றாட பழக்கம்!!
மற்ற இருவரும் நூல்நிலையம் நுழைந்தவுடன் , அன்றாட செய்தித்தாள்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டி, அந்த பகுதியில் அமர்ந்து விடுவார்கள்!!
நான் மட்டுமே நூலகர் அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்து விடுவேன்,! அலமாரியில் இருக்கும் புத்தகங்களை ஆர்வமுடன் எடுத்து வாசிப்பதில் எனக்கு விருப்பம் அதிகம்!! அங்கே அப்போது நூலகர் பழனி!
நல்ல மனிதர்! புதியதாய் வந்திருந்த ஒரு நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பை என்னிடத்தில் கொடுத்தார் வாசிக்க! ஓரிடத்தில் ஒரு பாட்டை வாசித்து அப்படியே மெய்மறந்து நின்று விட்டேன்!
அள்ளட்டுமா ?மொள்ளட்டுமா? அடிமடியில் காட்டட்டுமா ?குச்சிக் கட்டி,காக்கட்டுமா? குணமயி லே உன் தடத்தை? என்று என்று அந்த நாட்டுப்புறப் பாடல் தொடர்கிறது!!
சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஊர் சென்று விட்டாள் அவன் உள்ளம் கவர்ந்த காதலி!!
தேடுகிறான் தேடுகிறான் தேடுகிறான் அவள் கிடைக்கவில்லை! பாதையில் ,ஓரிடத்தில் ,ஒரு நாள் அவனுடைய காதலியின் கால் தடத்தை பார்க்கிறான்!
அண்மையில்தான் அவள் அந்த வழியாக நடந்து போய் இருக்கிறாள்! என்பதை அவன் ஊகித்துக் கொண்டான்!
அவன் காதலியின் கால் பதிந்த அந்த தடத்தை பார்த்தவுடன் அவனுக்கு பொங்கி வழிகிறது பாசப் பரிவு பிரிவு உணர்வு!! அப்போது அவன் பாடுகிறான் !அள்ளட்டுமா? மொள்ளட்டுமா?அந்த கால் தடம் பதிந்த மணலை வாரி தன் மடியில் கட்டிக் கொள்ளட்டுமா? என்ற
அள்ளட்டுமா?மொள்ளட்டுமா கால் தடம் பதிந்த மணலை வாரி தன் மடியில் கட்டிக் கொள்ளட்டுமா? என்று பரிதவித்து போகிறான்! அட ,ஒரு கால் மழை வந்துவிட்டால் என்ன செய்வது?
அருகே இருக்கும் குச்சிகளை பொறுக்கி வந்து ,அந்தக் கால் தடங்கள் அழிந்துவிடாமல் இருக்க, ஓர் பந்தலைப் போட்டு விடட்டுமா? என்று ஆர்வத்தால் பொங்கி வழிகின்றான்?
இது ஒரு நாட்டுப்புற பாடலின் சில வரிகள் மட்டுமே!! இந்தப் பாட்டு வரிகள் கொடுத்த ஆர்வமே, என்னை இலக்கிய ஆர்வலராக மாற்றியது! அது இன்றைக்கு வரைக்கும் தொடர்கிறது!
வீட்டில் அடிக்கடி சண்டையும் சச்சரவும் இதனால் ஏற்படுவதும் உண்டு! இவருக்கு எந்த நேரமும் ,இலக்கியம் , கவிதை!!
இவருக்கு மற்றதைவிட எழுதுவது படிப்பது ஊர்சுற்றி மேடையில் பேசித் திரிவது என்பதே வேலையாகிவிட்டது என வீட்டில் ஏச்சும் பேச்சும் என் மீது!
ஆனாலும் இன்றுவரை ,இலக்கிய வாசிப்பும், நேசிப்பும் ,சுவாசிப்பும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது!!
இலக்கு எல்லாம் இலக்கியமே என் இலக்கு மிக்கு !
என பாவேந்தரின் அருமை மகன் மன்னர்மன்னன் ஒரு முறை என்னைப் பாராட்டி எழுதி இருந்தது எனக்கு ஆறுதலாய் இருக்கிறது இப்போது!
- கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment