அத்தனையும் நலமாகும் என உரைக்கும் சிம்ம மாதமிது -பெ.தமிழ்ச்செல்வி.
ஆவணியும் சிறப்புகளும்
ஆடி போக
ஆவணி வர
அத்தனையும் நலமாகும்
என உரைக்கும் சிம்ம மாதமிது!
மாதங்களுக்கு அரசனென
அர்த்தம் கொண்டு....
வேங்கை மாதமென
சித்தர்களால் சிறப்புற
அழைக்கப் பெறும் மாதம்!
ஆவணி ஞாயிறில்
சூரிய ஹோரை இருப்பாக..
ஆவணி பிறப்பு குழந்தை
ஆன்மீக அறிவோடு வளரும்!
தேச நலனுக்கு
ஆவணி ஞாயிறு
சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்திட
நாட்டு நலம் செழிப்புடன் அமையும்!
ஆவணி கிரகப்பிரவேசம்
கிரகலட்சுமியை
நிரந்தர குடியிருப்பில் நிறுத்தி
குடும்பத்தை நிலைப்படுத்தும் மாதம்!
ஆடிப்பட்டம் தேடி விதைத்து
ஆவணியில்...
கண் போல பயிரை பாதுகாத்து,
வேளாண் மக்கள்
ஓய்வெடுக்கும் மாதம்!
சஞ்சலமாகஇருந்த அர்ச்சுனனுக்கு
ஆத்ம பலமளித்து
கீதை உபதேசம் செய்திட
கிருஷ்ணன் அவதரித்த
கோகுலாஷ்டமி தினம்
வரும் பெருமை மிகு மாதம்!
நெடிய உருவ திருவிக்கிரமன்
மூவடி இடம் கேட்டு
மகாபலிக்கு மோட்சம் அருள
ஆவணி மாத
திருவோண நட்சத்திரத்தில்
வாமன அவதாரம் எடுத்த மாதம்!
காஞ்சி காமாட்சியின் தீர்த்தத்தில்
ஆவணி மூலத்தில் நீராட
புனிதனாக்கி/மோட்சம் கிட்ட
பாதை காட்டும் மாதம்!
இளையான்குடி நாயனார்/
குலச்சிறையார்/அதிபத்தர்/
திருநீலகண்டர் ....எனும்
நாயன்மார்கள் அவதரித்த மாதம்!
கருங்குருவிக்கு உபதேசம் செய்தது,
நாரைக்கு முக்தி கொடுத்தது,
தருமிக்கு பொற்கிழி அளித்தது,
வந்தி என்பவளுக்காக
பிட்டுக்கு மண் சுமந்து-பிரம்படி பட்டது,
வளையலை விற்ற லீலை புரிந்தது,
நரிகளை பரிகளாக்கியது...என
மதுரை மண்ணில் சிவபெருமான்
திருவிளையாடல்கள்
திகட்டத் திகட்ட நிகழ்த்திய மாதம்!
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலிலே
ஆவணி மூலத் திருவிழாவும்,
சொக்கநாதனுக்கு
பட்டாபிஷேகமும் நிகழ்த்தும் மாதம்!
மலையாளத்தில் சிம்ம மாதம்
எனும் பெயராகி
கேரள மாநிலம்
புத்தாண்டு காணும் மாதம்!
மகாபலி சக்கரவர்த்தியின்
மோட்ச தினத்திலே...
அவர் தியாகத்தை,
வள்ளல் தன்மையை நினைவேந்த,
அத்தப்பூக் கோலமிட்டு
தோரணம் கட்டி
ஓணம் பண்டிகை கொண்டாடும் மாதம்!
காவல் தெய்வங்களுக்கு
ஆனி-ஆடியில் படையலிட்டு,
தொழில்களுக்கு அங்கீகாரம்
கிடைக்கவென நம்பியே
வேண்டிடும் மாதம்!
சிவனுக்கு மேம்பட்ட தெய்வமில்லை
சிம்ம(ஆவணி)த்திற்கு
இணையான மாதமில்லையென
குறுமுனி அகத்தியரால்
புகழப்பட்ட மாதம்!
தர்மம்/அர்த்தம்/காமம்/மோட்சமெனும்
புருஷார்த்தங்களை
நெய் விளக்கேற்றி
ஆவணி பௌர்ணமியில்
வழிபட அருளும் மாதம்!
தேடி சென்று வழிபட
ஓடி வந்து வினைகள் தீர்க்கும்
விநாயகரின் அவதரித்தல்
சதுர்த்தியில் நிகழும் மாதம்!
சங்கல்பம் செய்து
21 மாதம்/21 சதுர்த்தி விரதமிருக்க
சந்தோஷங்கள் மலரும் மாதம்!
வாஸ்து பகவான்
நித்திரை விட்டு எழும் நாளில்...
பூமி பூஜை செய்ய,
வீடு கட்டும் வேலை தடங்கலின்றி
நிகழும் மாதம்!
பாற்கடலில் பள்ளி கொண்ட
பரந்தாமனை
ஆவணி ஏகாதசியில்
அவன் தலம் சென்று வணங்க
பாவங்கள் விலகி
வைகுண்டபதவி கிட்டும் மாதம்!
ஆவணி அமாவாசையில்
பித்ரு பூஜை செய்திட,
முன்னோர் ஆசிகளுடன் அருளும்
அளவில்லாமல் கிட்டும் மாதம்!
ஆவணி பௌர்ணமியில்
புதுப்பூணூல் அணிய...
இரண்டாம் பிறவி தரும் மாதம்!
விரதமிருந்து கிரிவலம் வர
நினைத்த காரியங்களை
ஜோதிமயமானவன்
நிறைவேற்றும் மாதம்!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
மதன்லால் டிங்க்ரா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி
Dr.பிரம்ம பிரகாஷ்
வ.ராமசாமி ஐய்யங்கார்
நாமக்கல்.ராமலிங்கம் பிள்ளை
அன்னை தெரசா
முருக பக்தர் வாரியோர்....
போன்றவர்களை
நினைவுபடுத்தும் மாதம்!
இத்தனை நலன்களும்
வள்ளலாக வாரி வழங்கும்
ஆவணி மாதத்தில்
அனைத்து பலன்களும்
கிடைத்திடவே
இறைனை வணங்கிடுவோம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment