ஐ.டி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி..
தகவல்தொழில்நுட்பத்துறை மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை, வீட்டிலிருந்தபடியே பணிபுரிய மத்திய தொலைதொடர்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.
முதலில் ஏப்ரல் மாதம் மட்டும் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, பணியும் தடையின்றி நடைபெறுவதால் இந்த நடைமுறையைத் தொடர தொழில்நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்தன.
அதன்படி, மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் அக்டோபர் வரையில் இந்த நடைமுறையை நீட்டித்துள்ள நிலையில், கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஆண்டு இறுதி வரையில் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி வழங்கின.
இந்த சூழலில் அனைத்து மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், கொரோனா பரவலின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் பிபிஓ நிறுவன ஊழியர்களை ஆண்டு இறுதி வரை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு விப்ரோ மற்றும் நாஸ்காம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
Comments
Post a Comment