இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார்...யூகிக்க முடிகிறதா யார் அந்த கவிஞர் என்று.
கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது! அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது! மரம் வளர்த்தேன் இரண்டும் வந்து விட்டது !
இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கிறார் ஒரு மிகப்பெரிய கவிஞர்! உங்களால் யூகிக்க முடிகிறதா யார் அந்த கவிஞர் என்று?
மக்கள் குடியரசுத் தலைவர் என மக்களால் போற்றப்படும் நம்மைய்யா டாக்டர் ஏபிஜே ஏபிஜே அப்துல் கலாம்தான் அந்தக் கவிஞர்! பாரத நாடு பழம்பெரும் நாடு என பாடி வைத்தான் பாரதி !
பாரதம் 2020இல் வல்லரசு நாடாக வேண்டும் என கனவு கண்டு, 1998 ஆம் ஆண்டே எழுதிவைத்த எம்மான் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு ஈடாக இன்னொரு தலைவரை நம்மால் உதாரணம் சொல்லவே முடியாது!
15-10-1931ல் தெற்கின் கடை கோடியாம் ராமேஸ்வரத்தில் பிறந்து, 27-7-2015 ல் வடக்கின் கடைக்கோடி யாம் ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ,ஓர் நொடி நேரத்திற்குள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்!
அவரை ஏவுகணை நாயகன் என்பதா? எழுச்சிமிகு எழுத்தாளர் என்பதா? விஞ்ஞானி என்பதா?
மெய்ஞானி என்பதா ? அறிஞர் என்பதா? ஆசான் என்பதா? சான்றோன் என்பதா ?சரித்திர நாயகன் என்பதா? மக்கள் தலைவர் என்பதா?
மனித நேய இமயம் என்பதா? எளிமையின் சின்னம் என்பதா?நேர்மையின் வடிவம் என்பதா? கவிஞர் என்பதா? வீணைக் கலைஞர் என்பதா?
வான்வெளி பொறியாளர் என்பதா? வல்லரசாக, பிறந்த நாட்டை மாற்றத் துடித்த பத்தரை மாற்று தங்கம் என்பதா?
கடவுளின் அன்பு குழந்தை என்பதா ?குழந்தைகளின் ராஜா என்பதா? அப்பப்பா அவரைப்போல் ,இன்னொரு மனிதர் இங்கே பிறக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?
அப்படிப்பட்ட ஒரு வரலாற்று நாயகன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் நாம் பெற்ற பெரிய பெருமை!
பணி முடித்து குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து வெளியே வரும் போது கூட ஒரு பென்சிலை கூட எடுத்து வராத இலக்கியப் புதையல் அவர்!
16 டாக்டர் பட்டங்கள் பெற்ற பேய் கரும்பில் கண்ணுறங்கும் புண்ணியர் அவர் !
தனது கடைசி எட்டு ஆண்டு ஓய்வூதிய பணத்தை, தன் கிராம வளர்ச்சிக்கு கொடுத்த வள்ளல் அவர்!
பிரித்திவி ,அக்னி , திரிசூல் ஆகாஷ் , நாக் என்கிற பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம், அய்யா கலாமின் திருமுகம் நினைவுக்கு வந்து வந்து போகிறது! ஐயா!
நீங்கள் இளைஞர்களைப் பார்த்து கனவு காணுங்கள் என்றீர்கள்!
நாங்கள் இன்று, கனவு காணும் போதெல்லாம் ,உன் சிரிக்கும் முகம் எங்கள் சிந்தைக்குள் வந்து எழுந்திரு என்று ஆணை இடுவது போல் தோன்றுகிறது!
சுவாமி விவேகானந்தருக்கு அடுத்து இந்தியாவில் இளைஞர்கள் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்த இணையற்ற தலைவர் நீங்கள்!
இன்று ,உங்கள் நினைவு நாளில் ,எங்கள் நன்றி மலர்களை ,கண்ணீர் மலர்களாய் காணிக்கையாக்கினால், அது எங்களுக்குத்தான் கவுரவம்!
- கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment