அதற்கு பசியா...இல்லை, அதன் ஜோடியை காண வேண்டுமென்கிறஆர்வமா.
பாடம் சொல்லும் படம்!!
களத்தில் கம்பீரமாக செல்லும் ஆண் யானையைப் போல் தண்ணீர் குளம் நாடிச்செல்லும் களிறு!! ஏன் அத்தனை வேகமாக நடக்கிறது!
அதற்கு பசியா? இல்லை, அதன் ஜோடியை காண வேண்டுமென்கிறஆர்வமா? எதுவுமே இல்லை!
இப்போது யானையின் தும்பிக்கையை ஒரு முறை உற்று நோக்குங்கள்! சிங்கக்குட்டி ஒன்று இருக்கிறதா? ஆமாம்! அதனால் நடக்க முடியவில்லையாம்!
வெம்மை வாட்டும் பயங்கர காடு! தண்ணீர் தாகம் வேறு அந்த குட்டிக்கு! அதைப் பார்த்து கலக்கம் அடைய வேண்டியது அந்த குட்டியின் தாயே !
ஆனால் இங்கே தவித்து துடித்து ,அந்த சிங்கக் குட்டியை, நடக்கமுடியாத ,தாகத்தால் தவித்த, வெப்பத்தில் சுருண்டு போன அந்த சிங்கக் குட்டியை ,தன் துதிக்கையில் தூக்கிக் கொண்டு ,தனக்கு பரிச்சயமான நீர் நிறைந்த நீர்நிலை நாடிச் சொல்கிறது அந்த கம்பீரமான ஆண் யானை!
என்ன கருணை !
காருண்யம் !எத்தனைஇனிய கண்ணோட்டம் !
எத்தனை கனிவு! எத்தனை ஆர்வம்! எத்தனை பகைமை மறந்த உறவு!மனிதா !
நீ கற்றுக்கொள்ள வேண்டும் !
இது வெறும் படமல்ல !மானுடச் சமுதாயத்திற்கு ஒரு பாடம்!
அன்பில்லாமல் ,அரவனைக்கும் பண்பு இல்லாமல் ,நியாயம் இல்லாமல் ,நன்றி விசுவாசம் இல்லாமல் ,உதவும் குணம் இல்லாமல் ,தோழமை காட்டும் பிடிப்பு இல்லாமல்,நல்ல நட்பு இல்லாமல் , இரக்கமில்லாமல், ஈகை குணம் இல்லாமல், அடுத்தவர் கஷ்டத்தை கேட்டு இடுக்கண் களையும் எண்ணமில்லாமல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்னும் சுயநல போக்கால் ,பொதுநலம் மறந்த மனத்தால், பிறர் படும் துயரத்தை பார்த்தும் பார்க்காமல் போகும் நேயமற்ற குணத்தால், மனிதநேயம் மறைத்து வாழும் எண்ணற்ற மனிதர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்!!
இதில் இன்னொரு பேரழகு அச்சமில்லாமல் ஒரு சிங்கத்தின் பக்கம் யானை நடப்பதும், யானையின் பக்கத்தில், பாசத்தோடு நடைபோடும் ஒரு சிங்கத்தை பார்ப்பதும் பக்கம் வரும் பெண் சிங்கத்தின் குட்டியை, தும்பிக்கையில் ,ஒருவித தவிப்போடும் ,தன் செல்ல பிள்ளையை தூக்கி செல்லும் பாவத்தோடும் நடந்துசெல்லும் அந்த யானையின் இனம் புரியாத பேரன்பும் பேரழகு!
- கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment