சாகாத வானம் நாம்...வாழ்வில் பாடும் சங்கீத பறவைகள் நாம் -கவிஞர் ச. இலக்குமதி.
நல்லது சொல்வோம்-40
சிவகங்கையின் கவிச்சிங்கம்! உன்னால் முடிந்ததை ஊருக்கு உதவு! உன்னால் முடியும் உன்னை நீ நம்பு!
என்று முழக்கமிட்டவர் கவிஞர் மீரா! ஏதோ இவர் ஒரு பெண் கவிஞர் என நினைத்து விடாதீர்கள்! இவர் பெயர் மீ. ராஜேந்திரன்!
மாணவனாக இருந்த ராஜேந்திரனை கவிஞர் மீரா என வையம் புகழ மாற்றிக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா!
சிவகங்கை சீமையிலே 10 /10/ 1938 ல் பிறந்தவர்! 01/09/2002 ல் மறைந்தவர்!
எண்ணற்ற கவிஞர்களுக்கு சரணாலயமாக திகழ்ந்தவர்! புது கவிஞர்களுடைய பட்டாளத்தின் தளபதி இவர்!
அன்னம், அகரம், எனும் இரு பதிப்பகம் மற்றும் அச்சகம் மூலம் எண்ணற்ற கவிதை நூல்களை அச்சிட்டு கவிஞர்களை கை தூக்கி விட்டவர்!
சிவகங்கையில் இவர் வீட்டுக்கு எதிரே மாதம் ஒருமுறை கவி இரவு நடத்தி தமிழை வளர்த்தவர்!
1970 எண்பதுகளில் இவர் பெயரை உச்சரிக்காத கல்லூரியோ இளைஞர் உலகமோ இருந்திருக்க முடியாது!
அதற்கு முக்கிய காரணம் 1973 இல் இவர் வெளியிட்ட கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள் என்கிற கவிதை நூல் காரணமாகும்!
அதேபோல் அவருடைய ஒரு பாடல் எல்லா திராவிட இயக்க மேடைகளிலும் எதிரொலிக்கும்! அந்தப் பாடலைப் பார்க்கலாம்!
சாகாத வானம் நாம்! வாழ்வில் பாடும் சங்கீத பறவைகள் நாம்! பெருமை வற்றி போகாத நெடும் கடல் நாம்!
நிமிர்ந்து நிற்கும் பொதிகை நாம்! இமயம் நாம்! காலத்தீயில் வேகாத பொசுங்காத தத்துவம் நாம்! வெண்கதிர் நாம்! திங்கள் நாம்!
அறிவை மறைக்கும் ஆகாத பழமையினை அகற்றி பாயும் அழியாத காவிரி நாம்!
கங்கையும் நாம்! என்கிற இந்தப் பாடல் எழுபது எண்பதுகளில் கல்லூரி மாணவர்களிடையே திராவிட இயக்கத் தலைவர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்!
மீ.ராஜேந்திரன் என்ற பெயரை சுருக்கி மீ ரா இரண்டு எழுத்துக்களையும் ஒன்றுசேர்த்து மீரா என்று அண்ணா அழைத்தது மிகவும் பெருமையும் புகழும் கவிஞருக்கு கொண்டு வந்து சேர்த்தது!
அதுமட்டுமல்ல அண்ணாவே அவருடைய திராவிடநாடு பத்திரிக்கையில் இவருடைய கவிதை வரிகளை பாராட்டி எழுதி இருக்கிறார்! தெய்வங்கள் திருநாட்கள் எங்களுக்கு இல்லை!
தெருவோர சாக் கடையில் வருமா தெப்பம்! என்கிற இந்த வரிகளை அண்ணா பாராட்டியும் பேசியிருக்கிறார்! தனக்காக கார்மேகம் பொழிவதில்லை! தனக்காக சோழ நதி பாய்வதில்லை! தனக்காக பூங்குயில்கள் இசைப்பதில்லை! தனக்காக செவ்வாழை செழிப்பதில்லை!
மனிதன் மட்டும் தனக்காக வாழ்கின்றனே என்று நம்மைப் பார்த்து கேட்கிறார் கவிஞர்! இளைஞரை பார்த்து ஊக்கத்தின் உற்பத்தி சாலை உன் உள்ளம் எனப் பாராட்டுகிறார்!
மீராவுடைய கவிதைகளில் காதல் வீரம் இனமானம் தன்மானம் சமுதாய மேம்பாட்டு விழிப்புணர்வு அங்கதம் போன்ற பல்வேறு சிந்தனைகள் பளிச்சிட்டு இருக்கும்!
அவருடைய மற்ற பிரசித்தி பெற்ற நூல்கள் ஊசிகள் ராஜேந்திரன் கவிதைகள், குக்கூ, வா இந்தப் பக்கம், மீரா கட்டுரைகள், மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், என பல்வேறு நூல்களை படைத்துள்ளார்!
பல்வேறு கவியரங்கங்களில் இவரது கவிதை மிகவும் மக்களால் வரவேற்கப் பட்டும் புகழப்பட்டும் இருக்கிறது!
கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்கிற கவிதை நூலை எழுபது எண்பதுகளில் கல்லூரி மாணவர்கள் காதல் கையேடு போல் இதை கைகளில் வைத்து இருப்பார்கள்!
அந்த அளவுக்கு காதலைப் பற்றி மிக உருக்கமாக மீரா பாடியிருப்பார்!
உனக்கென்ன ஒரு பார்வையை வீசிவிட்டு போகிறாய்! என் உள்ளம் அல்லவா வைக்கோல் போராக பற்றி எரிகிறது!
இப்படி தான் காதல் வர்ணனைகள் இந்த கவிதை நூல் முழுக்க இருக்கும்! ஊசிகள் என்கிற நூல் சமூகத்தில் நிகழ்கின்ற அவலங்களைத் தோலுரித்துக் காட்டும்!
யாருக்கும் அஞ்சாமல் பாடுவதில் மீரா ஒரு அஞ்சாத சிங்கமே! எங்கள் ஊர் எம் எல் ஏ ஏழு மாதங்களில் எட்டு தடவை கட்சி மாறினார்!
மின்னல் வேகம் என்ன வேகம் என்பார்! ஒரு கவிதையில்! மேலே மேலே பூக்கடை கீழே நாறும் சாக்கடை!
அங்கங்கே பல மாநாடுகளில் மக்கள் கூடுவது பல காரணங்களுக்காக என்பதை உணர்ந்த இவர் ஒரு கவிதையில் கூடல் நகரில் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் பார்க்க! என்று எழுதி இருப்பார்!
இன்னொரு இடத்தில் செத்த பிணத்தை கட்டி அழலாம் முடிந்தால் காட்டி அள்ளலாம்!இன்னொரு கவிதையில் என் வேட்கையே நீ எனக்கு காதலை தந்தாய்! அது உழைப்பாளியின் வியர்வை போல உயர்வானது!
நான் உனக்கு இந்த வசன காவியத்தை தருகிறேன்! இது ஏழையின் கண்ணீர் போல் உண்மையானதா என்று பார் என்று பாடியிருப்பார்!
பாவேந்தர் தனக்கு குரு என்றும் பாரதி தான் தெய்வம் என்றும் மீரா தன்னை முன்னிறுத்தி இருக்கிறார்!
மகாகவி பாரதி பிச்சை மூர்த்தி புதுமைப்பித்தன் ஆகியோருக்குப் பிறகு புதுக்கவிதை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் மீரா! வானம்பாடிக் கவிஞர்களில் பாசறை கவிஞர் இவர்!
அவரது ஒரு சிறந்த பாடலை பின்பற்றி நடக்க முயற்சிக்க லாம்!
ஏனடா தம்பி தயக்கம்! எழுவாய் பழங்கதை பேசிப் பயனில்லை! புதிதாய் செயப்படு பொருளை சிந்தையில் நிறுத்தி நன்மையை நாடு! உன்னை திருத்தி பிறரை திருத்து! பேணு பொதுநலம்!
சுயநலம் தன்னை சுடு நினைவை சுத்தம் செய்! சிறுமையை நீக்கி சிந்திக்கப் பழகு! கடலை பார் அதன் அலைகள் பேசுவதைக் கேள்!
வானை நோக்கி வரையை நோக்கு! தூய்மை விளையும் தோட்டமாய் உன்னை ஆக்கு! எங்கே அறத்தின் ஆலயம் உள்ளதோ! எங்கே அறிவு திருவிளக்கு உள்ளதோ! எங்கே அன்பின் வழிபாடு உள்ளதோ! அங்கே தலை வை!
ஆயிரம் மலர் வை! நோக்கத்தை பெரிதாக்கு! நொந்தோரை தூக்கிவிடு! என்று சமூக அக்கறையோடு பல கவிதைகளைப் படைத்திருக்கிறார்!
மீராவின் கவிதைகளை படிக்கின்ற போது காதல் மென்மை வரும் சமூக அவலங்களையும் இணைத்து கடுமையான மனமும் வரும்!
துணிச்சல் வரும் தோள் கொடுக்கும் எண்ணம் வரும்! தோழமை நெஞ்சம் வரும் !அநீதியைக் கண்டு துடிக்கும் உள்ளம் வரும்!
எழுந்திருங்கள் எழுச்சி பெறுங்கள் புரட்சி செய்யுங்கள் என்கிற முழக்கத்தோடு வலம் வந்தவர்!
தமிழ் கவிதை உலகின் என்றைக்கும் வாழக்கூடிய எழுச்சி மிகுந்த கவிஞர் அவர்! நேரம் கிடைத்தால் மீராவின் ஊசிகளை கனவுகளை வாங்கிப் பாருங்கள் மனத்தில் ஒரு பக்கம் தென்றல் என்றால் இன்னொரு பக்கம் புயலாய் வீசும் விந்தையை நீங்களே அறிவீர்கள்!!
ஜூன் 30 இன்று உலக மீடியா தினம் உலக சமூக வலைத்தள தினமாய் கொண்டாடப்படுகிறது! மீடியா நம் கை பிடித்து நடக்கிறதா!
இல்லை நாம் அதன் கைபிடித்து நடக்கிறோமா என்று சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் மனங்களை ஆண்டு கொண்டிருக்கிறது!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்து மீடியா வெல்ல வேண்டும் என நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்!
இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச. இலக்குமதி வேலூர்- 9
Comments
Post a Comment