போர்க்கள நிகழ்வுகளை ஒரு இலக்கியம் வழி பார்க்கலாம் -கவிஞர் ச.இலக்குமிபதி.
நல்லது சொல்வோம்- 38.
சிகப்பு காகம்!
கோவிட் 19 ன் கொட்டம் அடங்கவில்லை!
அடக்கவோ யாரும் இல்லை! போர்க்களத்தில் அதனை வீழ்த்தவும் முடியவில்லை! இறைவா இதற்கு ஒரு முடிவு சீக்கிரம் கொடு!
மக்களை அச்சத்திலிருந்து காப்பாற்று! இன்று ஒரு போர்க்கள நிகழ்வுகளை ஒரு இலக்கியம் வழி பார்க்கலாம்!
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் களவழி நாற்பது என்பது சோழ மன்னனுக்கும் சேர மன்னனுக்கும் கழுமலம் என்கிற இடத்தில் நடந்த போரை வர்ணிக்கின்ற 41 பாடல்களைக் கொண்டது!
அதில் நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்கள் 22!
பல அடிகள் கொண்ட பஃரொடை வெண்பாக்கள் 19 உடையது!
சோழ மன்னன் கோச்செங்கணானுக்கும் சேர மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவருக்கும் நடந்த போரை வர்ணிக்கின்ற கவிதைகள்!
இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர் ஆவார்! இவர் சேர மன்னனுக்கு மிக உற்ற நண்பர் தன் நண்பனை போர்க்களத்தில் தோற்று சிறையில் அடைக்கப்பட்ட கணக்கால் இரும்பொறையை விடுவிக்க சோழ மன்னனுக்கு பாடிய பாடல்களின் தொகுப்பு என்பது செய்தியாகும்!
அப்போதைய போர்க்களத்தில் யானைகள் தான் முக்கிய பங்கு வகிக்திருக்கின்றன!
களவழி நாற்பது முழுக்க யுத்தகளத்தில் யானை படைகளின் போர் காட்சிகள் யானைகள் தலைகள் இழந்து தும்பிக்கைகள் இழந்து குருதி ஆற்றில் மிதந்து போகிற காட்சிகளை எல்லாம் படிக்கும்போது ஒருபக்கம் அச்சமாகவும் ஒரு பக்கம் கவிதையின் சிறப்பும் புலப்படுகின்றன!
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகம் பற்றிய 6 நூல்கள் புறம் பற்றி ஒரு நூல் அறம் பற்றி பதினொரு நூல்களும் உள்ளன அதில் புறப்பொருள் பற்றி கூறுகின்ற ஒரே நூல் இந்த களவழி நாற்பது ஆகும்!
போர்க்களக் காட்சிகளில் இரண்டை பார்க்கலாம்! தெரிகணை எஃகம் திறந்த வாய் எல்லாம் குருதி படிந்து உண்ட காகம் உரு இழந்து புக்கில் புறத்த சிரல் வாய செங்கண்மால் தப்பி யார்அட்ட களத்து!
இதன் பொருள் சிறந்த அம்புகளாலும் பிற கருவிகளாலும் புண்ணாக்க பெற்ற வீரர்களின் உடல்களிலிருந்து வழியும் ரத்தத்தை குடித்த கரிய காகங்களும் சிகப்பாக நிறம் மாறின செம்போத்து பறவைகள் போல் சிவந்த உடல்கள் ஆக மாறின மீன்கொத்திப் பறவையின் சிவந்த அழகை போல் மூக்கு களையும் பெற்றவைகள் ஆயின போர்க்களம் நடந்த கழுமலம் என்கிற அந்த ஊரில் போரில் ஏற்பட்ட இரத்த ஆற்றில் குளித்து எழுந்த அந்த காகங்கள் கருப்பு நிறம் மாறி சிகப்பாக மாறி விட்டனவாம்!
அங்கே பார்க்குமிடமெங்கும் சிகப்பு காக்கைகளே தென்படுகின்றன வாம்! இது எப்படி இருக்கு!
களவழி 41 பாடல்களும் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டே முடிந்திருக்கின்றது! இது ஒரு ஆச்சரியமான புலவரின் ஆற்றலை காட்டுகின்ற செய்தியாகும்!
இரண்டாவதாக ஒரு பாடலைப் பார்க்கலாம்! வேல் நிறத்து இயங்க வய வரால் ஏறுண்டு கால் நிலைகொள்ள கலங்கி செவி சாய்த்து மா நிலம் கூறும் மறை கேட்ப்ப போன்றவே பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் கூடாரை அட்ட களத்து!
இதனுடைய பொருள் அருவி பாயும் நீர் நாடன் ஆகிய சோழமன்னன் இடிமுரசு போன்று கொடியவர்களை வென்ற அந்த போர்க்களம் எப்படி இருந்தது தெரியுமா!
வேல்களால் மார்பில் குத்தப்பட்டு தளர்ந்துபோன யானைகள் நிற்கமுடியாமல் கலக்கமடைந்து ஒருபக்க காதுகள் நிலத்தில் படும்படியாக சாய்ந்து விழுந்து கிடக்கின்றன! போர்க்களத்தில் இது இயல்பாக நடப்பது தான்!
நிற்கமுடியாத யானைகள் தளர்ந்து போன நிலையில் தரையில் கீழே விழுந்து படுத்து கிடக்கும்!
இவ்வளவு தான் நமக்கு தெரியும்! ஆனால் இந்த நூலை எழுதிய புலவர் ஒரு வித்தியாசமான கோணத்தில் மிக முக்கியமான கருத்து ஒன்றை தன் கற்பனையில் ஏற்றி இங்கே பாடியிருக்கிறார்!
என்னவென்றால் படுத்துக் கிடக்கும் யானையின் காது தரையில் ஒரு பக்கம் இருக்கிறது அது அது எப்படி இருக்கிறது தெரியுமா!
பூமி மாதா சொல்கிற அறக்கருத்துக்களை நீதிக் கருத்துக்களை மிகப் பணிவோடு செவிகொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறதாம்!
அடடா அறக்கருத்துக்களை நல்லது சொல்கிற செய்திகளை எப்படி காதுகொடுத்து கேட்க வேண்டும் என்பதை மிக ஆழமாக இந்தப் பாட்டில் புலவர் பதிந்து வைத்திருக்கிறார்!
போர்க்களம் குருதி யானை சண்டை எல்லாம் மறந்துவிட்டு தமிழில் அழகை
புலவரின் சிறப்பை நல்லதைக் கேட்க வேண்டும் என்கிற அவசியத்தை வற்புறுத்துகிற புலவரின் நேர்த்தி நெஞ்சைத் தொடுகிறது!
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்பதை பொய்கையார் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு இருந்த காரணத்தினால் மண்ணில் விழுந்து கிடக்கின்ற யானை கூட அதன் காது தரையில் இயல்பாகப் பட்டுக் கொண்டிருந்தாலும் பூமி மாதா சொல்கிற நல்லவற்றை செவி மடுத்துக் கேட்பதாக பதிவு செய்திருக்கிறாரே!
அது எத்தனை சிறப்பாக இருக்கிறது! சற்றே கொரானா கவலைகளை விலக்கி வைத்துவிட்டு இந்த செந்தமிழ் பாடலின் சுவையை ரசிப்போம்!!
இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.இலக்குமிபதி வேலூர்-9
Comments
Post a Comment