உலக்கை மீது காக்கை உட்கார்ந்துகொண்டு உணவை சாப்பிடலாம் என்று நினைத்தால் முடியுமா - கவிஞர் ச.இலக்குமிபதி.

நல்லது சொல்வோம்- 39



பலப்படுத்தும் பழமொழிகள்!


உறவுகளோடு பழகுவதை போல அன்றாடம்  பழ மொழிகளோடு பழகி வருகின்ற பழக்கம் நம் தமிழர்களுக்கு அதிகம்!


வாழ்க்கைக்கு வழிகாட்டி நெறிப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வர பக்கபலமாக இருப்பது பழமொழிகள்!


மூத்தோரின் அறிவுரைகள் அனுபவ பட்டறிவு அனைத்தையும் ஒன்று சேர பெற்றிருப்பது பழமொழிகள்!


அனுபவ குறிப்புகள் நமது அறிவை கூர்மைப்படுத்தும் ஆயுதங்கள்!


தமிழ் நாட்டில் வழங்கி வரும் வட்டார பழமொழிகள் பல்லாயிரம்! நமக்குத் தெரிந்த பழமொழிகள் நிறைய உண்டு!


ஒருமுறை ஒரு செய்தியில் கடிஞையில் கல் இடுவார் இல்! என்பது படிக்க நேர்ந்தது! பல சாமியார்கள் அந்தக் காலத்தில் திருவோடு ஏந்தி தெருவோடு வருவார்கள்!


வீடுகளில் பொருளையோ உணவையோ யாசகமாக கேட்டு பெற்று செல்வார்கள்!


தற்போது திருவோடு களை பார்ப்பது சற்று சிரமம்தான்! அதற்கு பதிலாக பாத்திரங்கள் ஏந்தி யாசகம் பெறுபவர்கள் இப்போதும் மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறார்கள்!


அப்படிப்பட்ட பிச்சைப் பாத்திரத்தில் கல் இடுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்! என்பது அந்த பழமொழிக்கு பொருளாகும்! இவ்வளவு அழகாக ஒரு பழமொழி இருக்கிறதே இது எந்த நூலில் வருகிறது என்று ஆய்வு செய்தேன்!


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு என்கிற ஒரு நூலில் இந்த பழமொழியை தாங்கி வருகின்ற ஒரு பாடல் வருவதை அறிந்து அந்த நூலை படிக்க ஆரம்பித்தேன்!



400 பழமொழிகள் அதனைத் தொடர்ந்து விளக்கங்கள் அதற்குரிய நீதிக் கருத்துக்கள் என்பவை அடங்கி இருந்தன!


அந்த நூலை எழுதியவர் முன்றுறையர் என்கிற சமண முனிவர் ஆவார்! பழமொழி நானூறில் 401 வெண்பாக்கள் உள்ளன!


அம்பு விட்டு ஆக்கறக்குமாறு கற்றலின் கேட்டலே நன்று குன்றின் மேலிட்ட விளக்கு! அறம் செய்ய அல்லவை நீங்கும்!


நரி நக்கிற்று! என்று கடல் வற்றுவதில்லை! அறிமடமும் சான்றோர்க்கு அணி! நாய் மேல் தவிசு இடு மாறு ! ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்!


ஈனுமோ வாழை இருகால் குலை! தாய் மிதித்து ஆகா முடம்! திங்களை நாய்க் குறைத்தற்று! கல் தேயும் தேயாது சொல்!



பனியால் குளம் நிறைது இல்! பாம்பறியும் பாம்பின் கால்! நிறை குடம் நீர் தளும்பல் இல்!


என 400 பல மொழிகளை உள்ளடக்கி இந்நூல் பல அறக்கருத்துகளை உலகிற்கு சொல்கிறது!


பல்வேறு புராணக் குறிப்புகள் வரலாற்று செய்திகள் இந்நூலில் அடங்கியுள்ளன!இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்!


பொறுமை இல்லாமல் அவசரப்பட்டு போகிற இடத்தில் பெற வேண்டிய பலனை பெற முடியாமல் தோல்வியுற்று வருபவர்கள் ஏராளம்!


அப்படிப்பட்டவர்களை கிராமத்தில் இன்றைக்கும் அவசர குடுக்கை என்பார்கள்! ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள் அவர்கள் உடனடியாக காரியம் முடித்துவிட வேண்டும் என்று துடிப்பவர்கள்!



அவர்களைப் பற்றிய ஒரு பழமொழி யை உள்ளடக்கிய ஒரு பாடல்!


நிலத்தின் மிகையாம் பெரும் செல்வம் வேண்டி நலத்தகு வேந்தருள் நல்லாரை சார்ந்து நிலத்து நிலைகொள்ளா காலரே கானின் உலக்கை மேல் காக்கை என்பர்!


வீடுகளில் நெல்மற்றும் அரிசி மாவு போன்றவற்றை உரலில் இட்டு பெண்கள் உலக்கை கொண்டு குத்துவார்கள்!


அந்த உலக்கை மீது காக்கை உட்கார்ந்துகொண்டு உணவை சாப்பிடலாம் என்று நினைத்தால் முடியுமா!


உலக்கை மேலும் கீழும் போய் வரும்! அப்போது காக்கை உலக்கை மீது உட்கார்ந்து இருக்க முடியாது!உரலில் இருக்கும் தானியத்தையும் அல்லது உண்ணக்கூடிய பொருளையும் கீழே இறங்கி உண்ணவும் முடியாது!



அந்த நிலைமை தான் தனக்கு அதிக பணம் வேண்டும் என்று பெரிய அரசர்களோடு பழகி அங்கிருந்து பொருட் செல்வம் பெறலாம் என்று போகிறவன் அங்கே அவசரப்பட்டு நிலைகொள்ளாமல் தவித்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் திரும்பி விடுவான் அதற்காக இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது!


இதில் தெரிகின்ற நீதி பொறுமையோடு இருந்து காலம் கனிகின்ற வரை காத்திருந்து சாதித்துக் கொள்ள வேண்டும்!


என்பது நீதியாகும்! இன்னொரு பாடல் வழங்களும் தூய்த்தலும் தேற்றா தான் பெற்ற முழங்கும் முரசுடை செல்வம் தழங் கருதி வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப அதுவன்றோ நாய் பெற்ற தெங்கம் பழம் என்பது பாடல்!


இதற்குரிய பொருள் முழக்கமிட்டு வீழூம் அருவிகளும் மூங்கில்கள் முற்ற அவற்றில் இருந்து கீழே உதிரும் முத்துக்களும் நிறைந்த வளமுடைய வயல் பகுதிகளையும் பெற்ற மலை நாடனே!


ஒரு செய்தியை சொல்லுகிறேன் யாருக்கும் கொடுக்காமலும் தானும் உண்ணாமலும் சமூகத்திற்கு பயன்படாமலும் ஒருவன் சேர்த்து வைத்திருக்கிற முரசுகள் முழங்கும் அரசனுக்குரிய பெரும் செல்வம் போல அவனிடம் குவிந்து இருந்த போதிலும் ஒரு லாபமும் இல்லை!



அதற்கு உதாரணமாக நாய் பெற்ற தெங்கம்பழம் என்று இந்த நூலாசிரியர் மிக அழகாக பொருத்தமாக விளக்குகின்றார்!


அதாவது ஒரு நாயிடம் முழுத் தேங்காய் கிடைத்து விடுகின்றது இளநீர் என்று வைத்துக்கொள்ளுங்கள் அதனால் என்ன பயன்!


நாயும் சாப்பிடாது அந்தத் தேங்காயை இப்படியும் அப்படியும் உருட்டிக்கொண்டு ஓடுமே தவிர அதனால் சாப்பிட முடியாது சாப்பிடவும் யாரையும் அருகில் சேர்க்காது! பிறருக்கு கொடுக் கவும் நினைக்காது!


அதுவும் உன்னாது உண்ணவும் முடியாது!


அந்த பழத்தால் நாய்க்கு எந்தப் பயனும் இல்லை!அதே நிலைதான் பணத்தை யாருக்கும் உதவி செய்யாமல் தானும் அனுபவிக்காமல் சேர்த்து வைத்திருப்பவனு டைய பணம் நாய் பெற்ற தெங்கம் பழம் போல் யாருக்கும் உதவாது வீணாகிப் போகும்!


என்பது பாடலின் பொருள்! தமிழர்கள் பழ மொழிகளோடு மிகவும் ஐக்கியமானவர்கள்!


ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பது ஒரு பழமொழி!


ஆயிரம் முறை போய் சொல்லி என்பது தவறாக ஆயிரம் முறை பொய் சொல்லி என்று நடை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது! ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்! தனிமரம் தோப்பாகாது!



அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்! பொருள் கொடுத்து கொள்ளார் இருள்! அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது!


போன்ற பழமொழிகள் இன்றைக்கும் மக்கள் மத்தியில் ஒரு நீதியை சொல்வதற்காக பயன்படுத்தப்படுகின்றது!


ஏராளமாக தமிழில் இருக்கும் பழமொழிகளை படித்து அது சொல்கின்ற நீதிகளை அறக்கருத்துகளை நாம் உள்வாங்கி நடக்க முற்பட்டால் ஒவ்வொரு நாளும் நமக்கு உரிய நாளாகும்!! இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி!


மகாவிஷ்ணுவின் வலது கரத்தில் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாக சக்கரம் வீற்றிருக்கும்!


அதற்குப் பெயர் சுதர்சனம்! இன்னொரு பெயர் சக்கரத்தாழ்வார்! ஸ்ரீ அனந்தாழ்வார்! கருடாழ்வார்!


சக்கரத்தாழ்வார் என்று இந்த மூவருக்கும் ஆழ்வார் என்கிற அடைமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது!


ஆழ்வார்களுக்கு அடுத்து பரம்பொருளை தங்கள் கடமைகளை ஆளுகின்ற அற்புதத்தால் இவர்களுக்கு ஆழ்வார்கள் என்கிற பட்டம் கிடைத்தது!


காக்கும் கடவுளின் துணையாக இருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கி அவர் அருளைப் பெறுவோம்!


பழமொழிகள் நமக்கு சரியானபடி வழிகாட்டுகிற கலங்கரை விளக்கங்கள்! என்பதையும் நினைவில் வைப்போம்!



இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.இலக்குமிபதி  வேலூர்- 9


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.