பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

உலக முதியோர் வன்கொடுமை
ஒழிப்பு  விழிப்புணர்வு தினம்

வயதில்
அனுபவத்தில்
சொல்லில்
செயலில்
சிந்தனையில்
நற்பண்பில்
வாழ்க்கையில்
என அனைத்திலும்
பெரியவர்களே
முதியவர்கள்!


நரை
திரை
வழுக்கை
நடுக்கம்
சுருக்கம்
தனிமை
கூனல்
தள்ளாமை
அச்சங்கள்
ஆகிய இவைகள்
அத்தனையும்
நிரம்பியதே
முதுமை!


குழந்தைகள்
 தெய்வத்திற்கு
நிகரானவர்கள் என்பர்!
முதியோரை
அந்தக் குழந்தைகளுக்கு
நிகராக சொல்வார்கள்!
குழந்தைப்பருவம் போல
முதுமைப்பருவமும்
கொண்டாடப்பட வேண்டியது!


பெரும்பாலான குடும்பங்களில்
முதியவர்கள் வேண்டாதவர்/
எதற்கும் உதவாதவர்களாக
ஓரம் கட்டப்படுதல்!
இத்தகைய போக்குகள்
மாற்றவென
ஐக்கிய நாட்டு சபை
2002 ல்...நியூயார்க்கிலுள்ள
தன் தலைமையகத்தில்
முதல் கட்ட மாநாடு 
நடத்தப்பட்டது!


முதியோர்
உடல்/மன ரீதியிலான
வன்கொடுமைகளுக்கு
உள்ளாக்கப்படுவதாக
ஆய்வறிக்கை கிடைக்க...
முதியோர்களைப் 
பராமரிப்பவர்கள்/அரசாங்கம்
ஒன்று கூடி
முதியோர்க்கு நிகழும்
கொடுமைகளை எதிர்க்க
வேண்டுமென
உலக முதியோர் அவமதிப்பு
விழிப்புணர்வு நாளை
15.06.2006 ஆம் நாளில்
அனுசரிக்க 
ஐ.நா.சபையும்
அங்கீகரித்த தினமின்று!


முதியோர் அவமதிப்பிலுள்ள
துன்புறுத்தும் வகைகளாவன...

மனதளவில்
பேச்சளவில்
உடலளவில்
நிதி சார்ந்த அளவில்!


முதியோர்களுக்கான
நேரம் ஒதுக்காததே
அவர்கள் தனிமைக்கான
காரணமாகிறது!
இதற்கான தீர்வு
வீட்டிற்கு வெளியே இல்லை!
இளைய சமுதாயத்திடமுள்ளது!


உடல் சதையெல்லாம் ஒட்டிப் போக
ஊண் எலும்பெல்லாம் குறுகிப்போக
கண்ணிரண்டும் ஒளியிழந்து
செவியிரண்டும் மந்தமடைந்து
நடையிழந்து
களையிழந்து
ஒளியிழந்து
தள்ளாடுபவரே முதியோர்கள்!


முதியோர் நல மருத்துவர்
வி.எஸ். நட அறக்கட்டளை
மூலம் விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளை நடத்துபவர்!
அவர் கூறும் .....


வன்கொடுமை தடுப்பதற்கான வழிமுறைகள்


1.முதியோர் மீதான பார்வையை


இளைஞர்கள் மாற்ற வேண்டும்!


2.முதியோர் எதிர்பார்க்கும் அன்பு/அரவணைப்பை


 இளைய சமுதாயம் தர முன் வர வேண்டும்!


3.முதுமை ஒரு வரம்!முதியோரின்
பொறுமை/அனுபவம் தன் வாழ்விற்கு


இளைஞர்கள் உணர்ந்து அவர்களை


காப்பாற்றுதல் தன் கடமையென அறிதல் அவசியம்!


4.இதற்காகவென முதியோர்


விழிப்புணர்வு கூட்டங்கள்


 நிகழ்த்த வேண்டியது அவசியமாகிறது!


5.உளவியல் நிபுணர்கள் முதியோர் உள்ள


 வீடுகளில் ஆலோசனை வழங்க அழைத்துச்


செல்லுதல் அவசியமாகிறது!


6.பள்ளிகளில் 6 - 12 வகுப்பு பாடங்களில்...
முதியோரை மதிக்கும்/
அரவணைக்கும் முக்கியத்துவம்


 பற்றி புகுத்த அரசு ஆணை பிறப்பித்தல் அவசியம்!


முதியோர்களின் கடமைகள்


1.தன் சொந்தக் காலில் நிற்க


 முயல வேண்டும்!


2.கால முறைப்படி மருத்துவப்


பரிசோதனை செய்து கொள்ளுதல் அவசியம்!


3.முதுமைக் காலத்திற்கென


 கட்டாய சேமிப்பு வைத்திருத்தல் அவசியம்!


4.உன்னால் முடிந்தால் முடிந்த அளவு


குடும்பத்தினர்க்கு உதவ வேண்டும்!


5.தகுந்த நேரத்தில் சொத்து


 இருக்குமானால் உயில் எழுதி வைக்க வேண்டும்!


ஹெல்பேஜ்  ஆய்வறிக்கை

முதியோர் புறக்கணிப்பு
2014. லிருந்து
இந்தியாவில் 
அதிகமிருப்பதாக
ஹெல்பேஜ் அமைப்பு
ஆய்வு கூறுகிறது!



  1. வன்கொடுமை
        இந்தியாவில்
       2013....23%
         2014....50%
         பெண்கள்....5%
           ஆண்கள்....48%

  2.  வன்கொடுமை
        பெங்களூரில்....75%
          டெல்லியில்.....22%

  3.   வன்கொடுமைகள்
        வாய்மொழி வசவு....41%
         புறக்கணிப்பு.............29%
           அவமதிப்பு..................33%
             உடல்ரீதியாக...........67%
             மருமகள்களால்.......61%
             மகன்களால்.............59%

  4.    வன்கொடுமைகளை
          போலிசில் புகாராக
          தருபவர்கள்....................12%
             கௌரம் கருதி மறைத்து
             வைப்பவர்களே அதிகம்!


தள்ளாடும் முதுமைக்காலம்
தரணியில் இறுதிக்காலம்
நலமுடன் வாழ்ந்து
மக்களைப்பெற்று
அன்போடு அறிவூட்டி
பாசத்தோடு பண்பூட்டி
முறையாக வளர்த்து
அத்தனையும் முறையாகச் செய்து
குறை/நிறை சுட்டி
குறைவின்றி ஆளாக்கி
கடமைகளை முடித்து
கடனாளியென  பெயரெடுத்து
பெற்றவைகளை கற்றவர்களாக்கி
பெற்றவர்கள் மறந்தவர்களாகி
பெற்ற மக்கள் மாளிகையில்
பெற்றர்களோ முதியவர்களாக
25%.....தெருவிலே!
25%.... வீட்டு வன்கொடுமையிலே!
50%.....முதியோர் இல்லத்திலே!


கிழட்டு முதியவர் நிலை....

பிள்ளையார் கோயில்
அரச மரத்து மேடையிலே
வெற்றிலை போட்ட 
பொக்கைவாய் கிழவர்கள்!
பொழுதுபோக்காய்
அவர்கள் பேச்சு
அமெரிக்கா டிரம்ப்
இந்தியா மோடி பற்றி அல்ல!
அவர்கள் பேச்செல்லாம்
வற்றிப் போன ஊர் ஓடை
வறண்டு போன கோயில் கிணறு
வளம் தொலைத்த வயல்
வாசம் மாறிப் போன மண்
ஆகியவைகள் பற்றியே!
அந்த கிழட்டு முதியோர்கள்
நேசம் மாறாத உறவுகள்!
நேர்மை தவறாத நெஞ்சங்கள்!
மண்ணை
மனதை
மனிதனை
மகத்தானதாய் மதிப்பவர்கள்!


கிழட்டு முதியவள் நிலை...
அன்று
வயிற்றில் சுமந்து
இடுப்பில் சுமந்து
ஓடும் இடமெல்லாம் கூடவே
ஓடி வந்து உணவளித்து
முந்தானையில் அரவணைத்து
தாலாட்டு பாடியவள்!
இன்று
தனிமை சிறையில்
முகாரி ராகம் பாடுகிறாள்!


இலக்கியங்களில் முதியவர்கள்

முதுமை....
நோய்களின்
மேய்ச்சல் காடு!
கண்பார்வை குறைவு
காது கேளாமை
கைகளில் நடுக்கம்
மலச்சிக்கல்
உடலரிப்பு
மாரடைப்பு
மறதிநேரம்
உயர் இரத்த அழுத்தம்
மூட்டு வலி
நீரிழிவு நோய்
எலும்பு பலவீனம்
சிறுநீர் கசிவு
ஞாபகம் குறைவு


முதுமை ஒரு வரம்
அது ஒரு நோயல்ல
இளமைக்கு ஒரு முடிவு!
                   V.S.நடராஜன்.
இளமையும் வாழ்நாளும்
மூப்பும் மரணமும்
ஒரு கனவு போன்ற 
வேகமான மாறுதல்கள்!
            மு.சண்முகப்பிள்ளை.


தொல்காப்பியத்தில்

1.இளமை/முதுமை 
    சிறத்தல் /இழித்தல்(562)
2. செயற்கையின்
     முதுமையின்
     விளையின் என்று.(564)
3. சுழிந்தோர் 
    ஒழிந்தோர்க்கு
   காட்டிய முதுமையும்(1025)
4.குடிமை ஆண்மை
    இளமை மூப்பே(540)
5. முதுகுடி மகட்பாடு
      அஞ்சிய(1024)
6.மூப்பே பிணியே
     வருத்தம்
    பெண்மையோடு(1200)
7.நறுவிரை துறந்த
    நரை வெண் 
    கூந்தல்(276)
8. முன்றிற் போகா
     முதிர்வினள்(159)


நற்றிணையில்

முதியோர் இளமை
 அழிந்தும் எய்தார்(314)


பதிற்றுப்பத்தில்

1.அயர்திணைப் பிரியாது
   பார்த்துண்டுமாக்கள்
    மூத்த யாக்கையொடு
    பிணியின்று கழிய.    (22)
2. பெரியோர்ப் பேணி
    சிறியோரை அளித்தி. (70)


பரிபாடல்

1. கிழவர் கிழவியர்
     என்னாது ஏழ்காறும்(11)
2.முதியர் இளையர்
    முகைப் பருவத்தர்.(10)
3.  விரைவு நரையோரும்
     வெறு நரையோரும்.(18)


அகநானூறு

1. நரைமூதாளர்.(377)
2.மூத்தோரன்ன 
   வெண்டலைப் புணரி(90)
3. முதியர் பேணிய
     உதியஞ் சேரல்.(213)
4. இளையரும் 
     முதியரும்(348)
5.நாளது செலவும்
    மூப்பினது வரவும்.(353)
6. பொது செய் கம்பலை
     முதுசெய் பெண்டிர்.(86)
7. பனை முதிர் மகளிரொடு    
     குறவை தங்கும். (232)


கபிலர் கூற்று

முதியோரைப் போற்றுதல்
இளையோர் கடமை!


புறநானூறு

1.மூத்தோர் மூத்தோர்
     கூற்றும் உய்த்தென்ப(75)
2.நறுவிரை துறந்த
    நரைவெண் கூந்தல்.(276)
3. முன்றிற் போகா 
      முதிர்வினள்.(159)
4. நன்றாய்ந்த நீள் நிமிர்
     சடை முதிர் 
     முதல்வன்(166)


பெரும்பாணாற்றுப்படை

இளையரும் முதியரும்
கிளையுடன் துவன்றி.


சிறுபாணாற்றுப்படை

முதுவோர்க்கு முகிழ்த்த
கையினை.   


இனியவை 40

இளமையை மூப்பென்று
உணர்தல் இனிதே (37)


நாலடியார்

நரை வரும் என்றெண்ணி
நல்லறிவாளர்
குழலி இடத்தே 
தொலைந்தார்.


பதிற்றுப்பத்து

பெரியார் பேணி
சிறியோரை அளித்தி(70)


கலித்தொகை

தொடற்கண் தோன்றிய
முதியவன் முதலாக.  (2)


நான்மணிக்கடிகை

அவைக்குப் பாழ் 
மூத்தோர் இன்மை.(22)


திரிகடுகம்

மூத்தோர் இல்லா
அவைக்களன்
நன்மை பயத்தல் இல.(10)


திருக்குறள்

நன்றென்ற வற்றுள்ளும்
          நன்றே முதுவருள்
முந்து கிளவாச்செறிவு(715)


பழமொழி

1.நரைமுது மக்கள் உவப்ப
    நரை முடித்துசொல்லால்
    முறை செய்தார் சோழன்.
2.மூத்தோர் சொல்லும்
    முழு நெல்லியும்
    முன் துவர்க்கும்
    பின் இனிக்கும்.
3.மூத்தோர் மூப்பில்லார்க்கு
    இல்லுள் ஊண்
     ஈந்துண்பார் மண் மேல்
    படையராய் வாழ்வர்.
4. இழிவுடை மூப்பு
     பக்கத்தின் துய்யாது.


திருப்புகழ்

முதுமைப் பிணிகளாக...
1.குலைசொறி யீலைவலி
     வாதமொடு நீரிழிவு
    சோகை களமாலை
      கரமொடு பிணி
     தூறிருமல் சூழலுற.
2. ஊங்கிருமல் வந்து
     வீங்கு குடல் நொந்து
     ஓய்ந்துணர் வழிந்து.
3. துன்பமொடு இன்பமும்
     மறந்து விடுகின்ற
     உலக நினைவற்ற 
     தன்மை.
4. கழுத்து அடி
     மடைய வளைந்து.


குணம்குடி மஸ்தான் சாகிபு

மதிமுகம் உறவோடு
போல் மூப்பில் மாறுதல்


சம்பந்தர்

1.பல் வீழ்ந்து
    நாத் தளர்ந்து
    மெய்யில் வாடி
    பழிப்பாய் வாழ்க்கை!
2. விறலி விடு தூவ
     செவ்வதரம் கறுத்து
      தடித்ததோ?


கந்தபுராணம்

1.நாத்தளர்ந்து சோர்ந்து
 நடுக்கமுற்று காது கேளாது
பட்டினத்தார்

1.கண்ணீர் குன்றி
    செவி கேட்பிலா.
2. மந்தி எனும் படி
     குந்தி நடந்து.


சிலப்பதிகாரம்

மூத்தோர் குழவி
எனும் இவர்களை விட்டு
தீக்கிறந்தார் பக்கமே சேர்!


குண்டலகேசி

இளமை செத்து
மேல் வரு மூப்பு!


பாரதியார்

வயது முதிர்ந்து விடினும்
துயரில்லை/மூப்புமில்லை!


சீறாப்புராணம்

கண் மங்கி
தலை நடுங்கும்
முதியோராக


பல்கேரிய பழமொழி

பெரியோரை மதித்தல்
ஆண்டவனை மதித்தல்
போன்றது!


ஆத்திச்சூடி

தந்தை தாய்ப் பேண்


கொன்றை வேந்தன்

ஏவா மக்கள் மூவா மருந்து!


முதியவர் வேட மதிப்பு

1.தேம்பாவணியில்....
     சூசைக்கு அறிவுரை
     வழங்கும் வானவர்
     முதியவன் வேடமிட்டு!


2.கம்பராமாயணத்தில்...
    இராவணன் முதியவர்
     வேடமிட்டு சீதையை
    காணச் செல்லல்!
3. தினைப்புனத்து 
    வள்ளியைக் காண
    முருகப் பெருமான்
    முதியவர் வேடமிட்டு
     செல்லல்!
4.  சுபவிரதை தவம்
     சோதிக்க சிவன்
    கவிழ்ந்த தசையும்
    மெய்யும் தாங்கி
    முதியவராக வேடமிட்டு
    செல்லல்!


நடை தளர்ந்து
தனித்து நடக்க இயலாமை!
ஊன்றுகோல் தேவைப்படல்!
பேச்சு/பார்வை/கேட்டலில்
தடுமாற்றம்!
கண்கள் குழிந்து
பொலிவிழத்தல்!
வாயில் உமிழ்நீர்
ஒழுகல்!
தொண்டை/வாய்/நெஞ்சு
உலர்தல்!
கடனை திருப்பி வாங்க
மறதி!
சிறுநீர்/மலம் கட்டுப்பாடு
இன்றி ஒழுகுதல்!
உடல் கூனல்!
பல் வீழ்தல்!
உணவெடுத்தல் குறைதல்!


இத்தனை நோய் பிணிகளின்
குத்தகைதாரர்களே
முதியவர்கள்!
இவர்களுக்கான வன்கொடுமை தடுப்பு
நலன் சட்டம்
2007 ல் அமலானது!
ஆனால் துணிந்து
சட்டத்துறை நாடுவது
06/100 என்கிறது ஆய்வு!


கடந்த 10 வருடங்களில்
முதியோர் இல்லங்கள்
எண்ணிக்கை அதிகரிப்பு!
முதியோரை முறையாய் 
காத்திட்டால் தேவைப்படுமா  நாட்டினில்
முதியோர் இல்லம்?
குழந்தைகளாக நீங்கள்
இருந்த போது
அவர்கள் பெரியவர்கள்!
நீங்கள் பெரியவர்களாகும்
போது அவர்கள்
குழந்தைகள்!
முதுமை அடையாத
உயிர்களில்லை!
காலன் கருத்திது
கருத்தினில் கொள்க!
முதுமையின் தனிமை
கொடுமை!
ஆதலால் அன்பு செய்வதே
நம் கடமை!
முதியோர் இல்லங்கள்
மூடப்படட்டும்!
அவர்கள் மனம் குளிர
உதவிடுங்கள்!
அரணாக இருந்து
காத்திடுங்கள் ஆளாக்கியவர்களை!


கனிந்த பழ நிலையே
இனிக்கும் முதுமை!
முதிர்ந்த கனிகளை காம்புகள் உதிர்க்கலாம்!
முதிர்ந்த உயிர்களை
உறவுகள் துரத்தி விடுதல்
நியாயமாகுமா?
தேன் சொட்டும் கரும்பின்
சுவை தீர வீணென
சக்கையை வீசிடுதல் தகுமா?
அம்புலி காட்டி அமுதூட்டிய
கரங்கள்...தேய்மானம் மிகுந்த தேகமாகி ...
தன்மானமிழந்து தன் பசி
போக்கிடவே
கையேந்தும் நிலை தருதல்
முறையாகுமா?
காசு/பணம் /கந்து வட்டி/
கடன் வாங்கி/கல்லூரி சேர்த்து/பட்டம் நீ வாங்க
பட்ட பெரும் பாடு
எழுத்தில் அடங்காது!
ஆன்றோனாய் ஆக்கிடவே
அய்யனாரை வேண்டி...
சான்றோனாய் வந்திடவே



சாமி கிட்டே நேர்ந்திடல்!
ஒத்தை மகன் நலமெண்ணி
ஒத்தை வீடும் உயிலெழுதி
ஒரு வாய் சோத்துக்கு
அல்லாடல்!
வண்ண மலர்களால்
பூத்துக் குலுங்கி
தன் காலத்தில் கனி தந்த
மரம் தான் இன்று
இலை உதிர்ந்த மரமாய்
தனித்த மரமாய் இன்று!



விதைத்த வேரை
விழுதுகள் தாங்கிப் பிடித்து
தழைத்தோங்கிய மரம் தான் இன்று ஒற்றை
மரமாய் ஒதுங்க வழியின்று!
விழுதாக ஊன்றியதும்
விதையை/வேரை
மறந்திடல் முறையோ?
உனக்கும் காலம் வரும்
அன்று நீயும் 
தனி மரம் தான்!
கவனம் கொள்-விதைத்ததை
தான் அறுவடை செய்வாய்!


ஆறில்லா ஊரும்
ஆளில்லா வீடும் பாழ்!
பெற்றவர்களில்லாத
இடமெல்லாம்
காற்றில்லா விளைநிலமே!


வந்த வழி மறக்காமல்,
வளர்த்த இதயம் 
இழக்காமல்,
ஆளாக்கிய உயிர்களை
உதறாமல்,
பெற்றவர்களை போற்றி,
வயதில் பெரியவர்களை
வன்கொடுமைக்கு
ஆளாக்காமல்
இருப்போமாமென
இன்றைய 
உலக முதியோர்
வன்கொடுமை எதிர்ப்பு
விழிப்புணர்வு தினத்தில்
உறுதி ஏற்போம்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை..632513
9940739728.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி