ஆண்டவா இது எப்போது தான் முடியும்... எங்களுக்கு எப்போது தான் வாழ்வு விடியும் - கவிஞர் ச.லக்குமிபதி.
நல்லதே சொல்வோம்- 9
சேர வாரும் ஜகத்தீரே!
லாக் டவுன் முடியுமா! தொடருமா!
இது நடக்குமா! இப்படி இருக்குமா! என இறுக்கமா ஊரெங்கும் விவாதங்கள் நடந்தபடி தான் இருக்கின்றன!
அறுபத்தேழாம் நாளில் நாம் கோவிட் யுத்தகளத்தில் இருக்கின்றோம்! ஒருபக்கம் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு என்கிறார்கள்!
மறுபக்கம் ஊரெல்லாம் வழக்கம்போல சுறுசுறுப்பாய் மாறிவிட்டது போல் மக்கள் நடமாடி வருகிறார்கள்!
லாக் டவுன் இன்னும் இரண்டு மாதம் இருந்தாலும் இருக்கும் என பீதியை சிலர் கிளப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
ஆண்டவா இது எப்போது தான் முடியும் எங்களுக்கு எப்போது தான் வாழ்வு விடியும்! அக்கம்பக்கம் மாவட்டம் நுழையவே முடியவில்லை! சொந்த பந்தம் விசாரிக்கவோ வாய்ப்பே இல்லை !
நல்லது செய்ய நேரமோ அல்லது நாளோ இந்த கால நேரத்தில் அமையவே இல்லை! வெளியே சென்று தொழில்கள் தொடங்கி சம்பாதிக்க வாய்ப்பும் இல்லை!
ஆண்டவா எப்போது சூழ்நிலை எல்லாம் சரியாகி நாங்கள் சரியாக சிரிப்பது! எங்கும் ஒரு வித தேக்கம்!
வீட்டு பொருளாதார வீக்கம்! கடன் தொல்லைகளால் தாக்கம்! ஆண்டவா ஆள்பவன் நீ அல்லவா!
போதும் இந்த அலைமோதும் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து எங்களை கரை ஏற்று!
இதைத்தான் பதினெட்டாம் நூற்றாண்டின் மாபெரும் கவி சித்தர் தவ ஞானி யோக முனி தாயுமானவர் பரம்பொருளிடம் விண்ணப்பித்து இருக்கிறார்!
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே! (பராபரக்கண்ணி221) என்று பரம சிவத்திடம் வேண்டி கண்ணீர் வடிக்கின்றார்!
திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் 1705 இல் பிறந்தார்! இவர் தந்தை திருச்சி மன்னனிடம் கருவூலத் துறையில் வேலை பார்த்தவர்!
திருச்சி தாயுமான சுவாமிகள் அருளால் பிறந்ததால் தன் குழந்தைக்கு தாயுமானவர் என பெயர் வைத்தார்!
தந்தையின் மறைவிற்குப்பின் தாயுமானவர் அரசின் கருவூலத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்!
சிறு வயது முதல் தெய்வ சிந்தனையும் தவ நிலையும் கைக்கூடி வர எதிலும் நாட்டம் இல்லை!
வயது 36ல் துறவு மேற்கொண்டவர்! 56 தலைப்புகளில் 1452 அருள் பாடல்கள் தந்த தெய்வப் புலவர் இவர்!
உபநிடத கருத்துக்கள் அதிகம் சொன்ன சன்மார்க்கி! ஊரும் உலகம் அவர் எழுதிய பராபரக் கண்ணிகள் 389 படித்தால் போதும் மனசெல்லாம் மகாதேவர் வந்து அமர்ந்தது போல் ஆனந்தமயமாக இருக்கும்!
இரண்டு அடிகள் கொண்டது ஒரு கன்னி என்பதாகும்! 778 வரிகள் அத்தனையும் ஆத்மாவின் ராகங்கள்!
ஒவ்வொரு கண்ணியும் இரண்டு அடிகள் கொண்டது!
என்றும் இருக்க உளம் கொண்டாய் இன்பத்தமிழுக்கு இலக்கியமாய் இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோடு இருப்பாய் நீ என்றும் என்று மகாகவி பாரதி பாடி மகிழ்ந்திருக்கிறார்!
வள்ளலார், மகாகவி பாரதி பாடல்களில் தாயுமானவரின் தாக்கம் அதிகம் இருக்கும்!
ஆசைக் கோர் அளவில்லை என்பது தாயுமானவரின் பிரசித்தி பெற்ற பாடல்! இன்னும் இன்னும் இன்னும் வேணும் என்று அலைகின்ற மனம் கொண்டோர் கொரானா வந்த காலத்தும் கொஞ்சம் கூட அடங்கியதாக தெரியவில்லை!
தாயுமானவருக்கு ஓர் ஆசை வந்திருக்கிறது அது என்ன!
கொல்லா விரதம் குவளையும் எல்லாம் ஒங்க எல்லோருக்கும் சொல்வது என் இச்சை பராபரமே என்கிறார்! உயிர்க்கொலை கூடாது என்பது அவரது ஆசை!
தெய்வத்தை வணங்கி என்றும் தெய்வ சிந்தனையில் இருக்க நினைக்கும் சங்கத்தில் சேர வாரும் ஜகத்தீரே என்பது அவரது அன்பான அழைப்பு!
ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்த வெள்ளம் பாயாதோ என்று சிவனிடத்தில் வேண்டுகின்றார் கோவிட் காலத்தில் நாம் இறைவனை கேட்பதுபோல!
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம் புன்னாக செய்தது இனி போதும் பராபரமே என்று அன்று அவர் பாடியது இன்று நமக்கும் பொருத்தமாய் இருக்கிறது!
தாயுமானவர் கவிதைகள் எல்லாம் அமுதக் கவிதைகள்! ஒன்றை நிணைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் நமது மனம்!
துயரத்தில் துடித்த ஓர் ஏழை பாட்டியை அவர் அன்னை அகிலாண்டேஸ்வரி யாக நினைத்து வணங்கி இருக்கிறார்!
அவரது மனம் போல எல்லோர் மனமும் பக்குவப்பட்டு விட்டால் பாரில் பிரச்சனைக்கு இடமே இல்லை!
கொள்ளி தேள் கொட்டி குதிக்கின்ற பேய் குரங்காய் கள்ள மனம் துள்ளுவது ஏன் பராபரமே என்று அவர் கேட்டது இன்றைய கள்ள மனங்களுக்கு ஒரு சரியான சவுக்கடி! சாட்டையடி!
அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானாய் வந்து எய்தும் என்கிறார் அந்த சிவஞான செல்வர்!
இதை ஓரளவுக்கு புரிந்தபடி கோவிட் காலத்தில்,களத்தில் துடித்தவர்களுக்கு தோள்கொடுத்து நின்றிருக்கிறார்கள்!
இந்த மனம் எல்லோருக்கும் வாய்க்க வேண்டும்! எப்போதும் வாய்க்க வேண்டும்! எல்லோரும் இன்புற்று இருக்க இறைவனை வேண்டுவோம்!
தாயுமானவரின் பராபரக்கண்ணி களை வாசித்து தயவு நிறைந்தவர்களாக மாறுவோம்!
சேர வாரும் ஜகத்தீரே என்கிற தாயுமானவரின் ஆசையினை என்றும் நாம் மதிப்போம்!!
இப்படிக்கு வாரியார் தான் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் -9
Comments
Post a Comment