நல்லது சொல்வோம் : பிச்சை எடுத்தாவது கல்வி கற்பது நல்லது என்கிறார் - கவிஞர்.ச லக்குமிபதி.

நல்லது சொல்வோம்- 10        


  


செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்!நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!


நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்று கவியரசர் பாடி வைத்தார்!


அந்தப் பாடல்தான் இந்த கொரானா காலத்தில் சற்று ஆறுதலாய் இருக்கிறது!


வைரஸை ஏற்றுமதி செய்தவன் யாரோ அவன் நிம்மதியாய் இருக்கின்றான்!


இறக்குமதி செய்து கொண்டவன் எல்லாம் திண்டாடி தவித்திருக்கிறான்! இது விதியின் சதியோ? மதியால் வெல்ல முடியாமல் எல்லா வளர்ந்த நாடுகளுமே மண்டை காய்ந்து கிடக்கின்றன!



பக்கத்து மாநிலத்தில் இருக்கும் மகனை பார்க்கவோ முடியவில்லை! பேரன் பேத்திகளை பார்க்க முடியாத தாத்தாக்கள்!


மகளை மருமகனை பார்க்கமுடியாமல் பெரியவர்கள்! மருந்து வாங்க கூட தவிக்கின்ற குடும்பங்கள்!


தொலைந்து விட்ட வெற்றிக்கான முகவரிகள்! மருந்து வாங்க கூட வசதி இல்லாத குடும்பங்கள்! ஆஸ்பத்திரி அவலங்கள்! எல்லை கோடுகளில் எச்சரிக்கைகள்!


தள்ளிப்போகும் திருமணங்கள்!


தடைப்பட்ட தேர்வுகள்! அப்பப்பா கொரானாவில்தான் எத்தனை கொடுமைகள்! நல்லது ஏதும் செய்ய முடியவில்லை!


பண்டிகைகள் திருவிழாக்கள் ஏதுமில்லை! இதைத்தான் கிபி பதினான்காம் நூற்றாண்டில் பாடிவைத்தார் ஒரு புலவர்! நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை!



கொரானாவில் நலிந்த நமக்கு நாளேது கிழமை எது! அதிவீரராம பாண்டியன் என்னும் மன்னன் கோற்கை நாட்டு அரசன் ஆவான்! அவனே புலவனும் ஆவான்!


அவர் எழுதிய நூலின் பெயர் வெற்றிவேற்கை! அதற்கு இன்னொரு பெயர் நறுந்தொகை!


இவர் எழுதிய மற்ற நூல்கள் நைடதம், காசி காண்தம், கூர்ம புராணம், லிங்க புராணம், திருக்கருவை அந்தாதி, இன்னும் பல நூல்கள்!


சிறந்த சிவபக்தர் இவர்!இவர் எழுதிய பாடல்கள்       
  82 நீதீகளை சொல்வன!


எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்! இதை இவர் தான் எழுதினார்! எழுத்தறிவித்த வர்களை இறைவன் களாக கும்பிடுபவர்கள் என்றைக்கும் சிறப்புற்று வாழ்வார்கள்!


இன்னொரு அறக்கருத்து செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்!


சுற்றத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் அவர் சுகதுக்கங்களில் அருகிருந்து உதவி செய்தல் வேண்டும்! அப்படி செய்தால் செல்வர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும்!



ஆனால் இன்றைக்கு செல்வர்கள் எங்கே சுற்றத்தை கவனிக்கிறார்கள்!


தங்களை மட்டுமே கவனித்துக் கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார்கள்!


கூடப்பிறந்த தங்கைக்கு தீபாவளிக்கு கூட அரை முழம் பூ வாங்கி தந்து பார்த்து விட்டு போக மனம் இல்லாத அண்ணன்மார்கள்!


ஏற்றிவிட்ட ஏணியை எங்கே பார்த்துவிட்டால் செலவாகும் என வேறு வழி பார்த்து பயணிக்கும் உறவுகள்!


சுற்றத்தை சுமையாய் கருதுபவர்கள் எங்கும் நம்மை சுற்றி இருக்கிறார்கள்! பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்!


இதுவும் நறுந்தொ கையில் ஒரு அருங் கருத்து!


எல்லா சமயங்களிலும் கணவன்மார்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை!


அவர்கள் சூழ்நிலையும் மனநிலையும் மாறுபட்டு கொண்டே இருக்கும்! அதை அடிப்படையாக வைத்து பெண்கள் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பே இருக்காது!



அதிவீரராம பாண்டியன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்! கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே!


பிச்சை எடுத்தாவது கல்வி கற்பது நல்லது என்கிறார்! இன்னொரு கருத்து இரந்தோருக்கு ஈவதும் உடையோர் கடமை!


செல்வம் உடையவர்கள் தம்மிடம் இரந்து வருபவர்களுக்கு உதவி செய்வது அவர்களது கடமை என கொள்ள வேண்டும்!


துணையோடு அல்லது நெடுவழி போகேல்! தனியாக தொலை தூரம் போகாமல் ஒரு துணையோடு போய் வருதல் ஆபத்து இல்லாதது!


வழியே ஏகுக வழியே மீளுக இதுவும் நாம் அவசியமாக கடைபிடிக்கவேண்டிய ஒரு நல்ல ஆலோசனை!


பெருமையும் சிறுமையும் தான் தர வருமே என்பது நறுந்தொகை முப்பதாவது கருத்து!



தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற புறநானூற்று பாடலை போன்றது இதுவாகும்!


பெருமை சிறுமை வருவதும் நாம் செய்கின்ற செயல்களைப் பொறுத்து தான்!


அதனால் நல்லது செய்தால் நன்மை தீயது செய்தால் தீமை!


இரண்டுக்கும் நாமே பொறுப்பு என்பதை இன்றைய இளைஞர்கள் உன்னிப்பாக கவனித்து நடந்துகொண்டால் உயர்வது நிச்சயம்! யானைக்கு இல்லை தானமும் தருமமும்!



பூனைக்கு இல்லை தவமும் தயையும்! என்கிற நறுந்தொகை வரிகள் எல்லாம் ஒருவனது வேடத்தைப் பார்த்து மதிப்பிடக் கூடாது என்பதை அறிவுறுத்துவதாக அமைந்திருக்கின்றன!


எனவே நறுந்தொகை படிப்போம் நன்னிலை அடைவோம் !


செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்!!



இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர். ச லக்குமிபதி வேலூர்- 9


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.