என்னதான் விஞ்ஞானம் நம் வாழ்வை சுலபமாக்கி விட்டது என்றாலும்...வைரஸ்சிடம் தோற்றல்லவா கிடக்கின்றோம்-கவிஞர் ச.லக்குமிபதி.
நல்லதைச் சொல்வோம் -8
தெய்வம் இருப்பது எங்கே! அது இங்கே!
விடாமல் துரத்தி வருகிறது கோவிட் வைரஸ்!
அது விலகும் நாள் எந்நாளோ! நாம் மகிழ்வு பெறும் நாள் எந்நாளோ! அது வந்த நாள் முதலாய் வாடி நிற்கிறது வையம்!
என்னதான் விஞ்ஞானம் நம் வாழ்வை சுலபமாக்கி விட்டது என்றாலும் ஒரு வைரஸ்சிடம் தோற்றல்லவா கிடக்கின்றோம்!
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்! நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் என்கிறார் கவியரசர்!
லாக் டவுன் விளிம்பில் விழிநீர் துடைத்தபடி எண்ணற்ற இல்லாதார் இருந்தபடி இருக்கின்றார்!
அவர்களுக்கெல்லாம் இருப்பவர்கள் அன்பையும் கருணையும் காட்டிட முன்வந்தால் அவர்கள் நெஞ்சம் பூவாய் விரியும்!
நாலாவது லாக் டவுன் முடியும் நேரம்! வைரஸ் மடியும் நேரம் தெரியாமல் இன்னும் தவிக்கிறது தேசம்! நடக்கட்டும்!
இறைவா உன் நாடகமா இது நம்ப முடியவில்லை! பல கோடி மக்கள் பிரார்த்தனைகள் ஒருநாள் பலன் தராமலா போகும்!
வலிகளோடு வாழ்வை நகர்த்தும் எங்கள் கண்ணீர் துடைக்க உன் கருணை கரங்கள் நீளாமலா போகும்!
வாழ்வே மாயம் எனும் பாலபாடம் தெரிந்தவர்கள் நாங்கள்! இருப்பது கொஞ்ச காலம் என்பதை மறக்காமல் இருப்பவர்கள் நாங்கள்!
அதற்குள் எங்களுக்கு நல்லதுகள் நடக்க அருள் செய்ய மாட்டாயா ஆண்டவரே! குமரகுருபரர் நாடறிந்த ஒரு மாபெரும் கவிஞானி!
அவரது புலமை இமயம் போல உயர்ந்தது! இல்லையெனில் அவரது ஆற்றலை மெச்சி அருகிலிருந்து அன்னை மீனாட்சி முத்துமாலை பரிசளித்து இருப்பாரா!
அவரது கற்பனைகள் நம்மை விண்ணைத்தாண்டி அழைத்துச் செல்லும் அபார ஆற்றல் பெற்றவை!
நதியை விட அழகாய், நந்தவனத்தை விட அழகாய், மழை சாரலை விட சுகமாய், மல்லிகை மணத்தை விட சுகந்தமாய், ஆனந்தம் அளிக்கக்கூடிய அற்புத பாடல்கள் அவரது பாடல்கள்!
நீதியை சொல்வதில் அவருக்கு நிகர் அவர்தான்! வாழ்வின் நிலையாமையை அவர் சொன்ன ஒரு பாடலைப் போல் இதுவரை யாரும் பாடியதாக தெரியவில்லை! அதுவும் கடவுள் வாழ்த்தில்!
குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் என்பது 102 பாடல்களைக் கொண்டது! அதில் ஒரு பாடல் கடவுள் வாழ்த்து!
கடவுள் வாழ்த்தில் இப்படி பாடுகிறார்! "நீரில் குமிழி இளமை நெடுஞ்செல்வம் நீரில் சுருட்டும் நெடும் திரைகள் நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே வழுத்தாது எம்பிரான் மன்று" இளமை என்பது மழைநீரில் தோன்றி மறையும் குமிழி போன்றது!
அது சில நொடிகள் இருந்து மறைந்துவிடும்! அப்படித்தான் இளமைக் காலமும்! அடுத்து நெடுஞ்செல்வம் கடலில் எழுந்துவரும் பெரிய அலைகள் போன்றது!
மேலெழும்பி கீழே வரும் காற்றினாள் சுருட்டப்படும் நீர் அலைகளை போன்றதுதான் செல்வம்!
இருப்பதுபோல் தோன்றும் இல்லாமல் போல் மறையும் அது அலைகளைப் போல! நீரின் மேல் எழுதுகின்ற எழுத்தை போன்றதுதான் இந்த உடம்பும் வாழ்க்கையும்!
அதனால் நம்மவர்களே இறைவனை கிடைத்த நேரத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது ஏனோ என்று குமரகுருபரர் கேட்கிறார்! இது யோசிக்க வேண்டிய ஒரு செய்தி!
பதினேழாம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டம் என்கிற சிற்றூரில் பிறந்தவர்! பதினாறு நூல்களையும் படைத்தவர்!
தாமிரபரணிக்கரையில் பிறந்து வளர்ந்து, வைகை நதிக்கரையில் வளர்ந்து, வாழ்ந்து, காவிரிக்கரையில் மடம் அமைத்து, மணி தமிழ் வளர்த்து, இறுதியில் கங்கைக் கரையோரம் காசியிலே மடம் அமைத்து கன்னிதமிழ் வளர்த்து சைவமும் வளர்த்து அங்கேயே சித்தியடைந்த மாபெரும் சொல்லேர் உழவர்!
காசி மடம் அமைக்க இடம் கேட்டு அப்போது இருந்த சுல்தானிடம் போகிறார் குமரகுருபரர்! அவருக்கு இந்துஸ்தானி தெரியாது பேச மறுக்கிறார்!
மறுநாள் கலைவாணியிடம் கேட்டு இந்துஸ்தானி கற்று பராசக்தியின் வாகனமான சிங்கத்தை வரவழைத்து அதன் மேல் அமர்ந்து அரச சபைக்கு நுழைந்த அஞ்சா நெஞ்சர் குமரகுருபரர்!
அங்கே எழுதியதுதான் சகலகலாவல்லி மாலை! பதினாறு நூல்கள் படைத்தவர்!
கடவுள் வாழ்த்து பாடல் ஒன்றில் இத்தனை ஆழமாய் வாழ்வின் நிலையாமையை பதிவு செய்தவர் யாருமில்லை!
குமரகுருபரர் காட்டிய வழியின்படி இருக்கிற கொஞ்ச நாளில் உடல்நலம் உள்ளநலம் காப்போம்!
இறைவன் அடி தொழுது நிகரற்ற அவன் அருளை பெறுவோம்! தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே !
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்தது உண்டோ அங்கே!
இந்த இரண்டும் நம்மிடம் நிரம்பியிருப்பதால் தெய்வம் நிச்சயம் நம்மிடமும் இருக்கும்!!
இப்படிக்கு வாரியார் தாசன் கவிஞர் ச.லக்குமிபதி வேலூர் -9
Comments
Post a Comment