என் நேரம்...கேள்வி மட்டும் இவளிடம்...அவளுக்கு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
உலக முதிர் கன்னிகள்தினம்
கண்ணைச் சுற்றி கருவளையம்
கவலை மண்டிய முக வடிவம்
தொங்கிப் போன தோள்கள்
தோய்ந்து போன நடை
தனிமை தாங்கிய இதயம்
தளர்ந்து ஒடுங்கிய செயல்கள்
இத்தனையும் அடக்கமான
பெண்ணின் சமூகப் பெயர்
30 வயதான முதிர்கன்னி!
பெரும்பாலும்..
வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு
வசதியின்மை காரணமாக
வாய்ப்பிழந்த இவர்களை
வாழ்க்கையை
தவற விட்டவர்களாக
முத்திரை குத்தி
29.05.2014 முதல்
ஐக்கியநாட்டுசபை
மே மாத 30 ஆம் திகதியை
சர்வதேச முதிர்கன்னி தினமென
கொண்டாடுகிறது!
மிஸோகமிஸ்ட்
(திருமண வெறுப்பாளர்)
அன்மாரீட்(திருமணமாகாதவர்)
இந்த வார்த்தைகள்
அவளாகவே சொல்லி
நழுவும் சால்ஜாப்பு வார்த்தைகள்!
பூப்படைந்து நாளாச்சு!
தோழிகளெல்லாம்
துணை கொண்டு போயாச்சு!
இவளின் கலர் கனவெல்லாம்
30 வயசு கடந்ததால்
கறுப்பு நிறமாச்சு!
அச்சம்/மடம்/நாணம்/பயிர்ப்பு
அத்தனையும் கொண்ட
மங்கை தானிவள்!
அரை கிராம் தாலியுள்ள
மஞ்சள் கயிறு கழுத்திலும்
500ரூ. மெட்டி கால்விரலிலும்
இல்லாத காரணத்தால்
சமூக பல்கலைகழகம்
பட்டம் கண்ட
முதிர்கன்னியானவள்!
வீதிக்கு வருவதெல்லாம்
விற்பனை ஆகிறது!
இவள் விதிக்கு மட்டும்
இவள் மீது கொள்ளை ஆசை
வீதிக்கு இவள் வாழ்வை விட
மூச்சு கட்டி மறுக்கிறது!
சில சமயம்
இவளை அறியாமலே...
நெருங்கிய தோழி
குழந்தையுடன் வர
ஏதோ தவறிழைத்ததைப்
போல எண்ணி
ஓடி ஒளிகிறாள்!
பல சமயம்
தன்னை அறிந்தே...
கிடைக்கும் கல்யாண மடலில்
மணமகளின் பெயரை
மறைத்து விட்டு
தன் பெயரை எழுதிப் பார்த்து
அல்ப சந்தோஷப்படுகிறாள்!
பூப்படைந்து எழுத்தானது
13 வயதில் !
பதிப்பு கண்டது
18 வயதில் !
புத்தக வெளியீடு கொண்டது
20 வயதில்!
இன்றைய நாள் வரை
வாசிக்கப்படாத புத்தகமாக
30 வயது கடந்தும்!
பூத்துக் கிடக்கிறாள்
தொடுப்பதற்கு ஆளில்லாத
முதிர் கன்னியாக!
இவளை சிருஷ்டித்ததன்
நோக்கமென்ன?
எதை நோக்கி இவள் பயணம்?
வீடு முழுதும் உறவினர்கள்
யாரோடும் உறவுமில்லை
எவருடனும் பகையுமில்லை!
அவள் மட்டுமே அவளுக்கு
அன்னியோன்ய துணையாக!
அவள் பயணம் தொடர்கதை
அதற்கு முடிவுரை எழுதும்
சக்தி யாருக்கும் இல்லை!
தான் யாருக்கு சொந்தம்
என்ற கேள்வி
நோக்கியே இவளின் பயணம்!
அலங்காரத்திற்கு
ஒத்திகை போட்ட
அழகு பார்த்துப் பார்த்தே
அவள் வீட்டு கண்ணாடி கூட
ரசமிழந்து போனது!
திலகமிட
பூச்சுமை தாங்கும்
அவள் மனச்சுமையின் பாரம்
எந்த சிலுவை சுமக்கும்?
கண்ணீரில் கலைவது
மை மட்டுமல்ல
அவளின் இளமையும் தான்!
கன்னத்துக் குழியில்
அடக்கம் கண்டது
அவளின் கனவுகளும் தான்!
வந்தவர்களுக்கான
வணக்கம்!
நாணம்
மௌனம்
மூன்றையும் தந்து விட்டு..
வீட்டிற்கு போய்
கலந்து பேசி சொல்கிறோம்
பலகாரம் சாப்பிட்டவர்கள்
காக்கா/குருவி ஆனதும்
இவள் மீண்டும் புகுகிறாள்
கன்னி மாடச் சிறையில்!
அவள் வீட்டு காப்பி தம்ளரில்
எத்தனை உதடுகள்!
அவள் தந்த சிற்றுண்டி தட்டில்
எத்தனை சுவடுகள்!
எனக்கானவன் இவனா?
இல்லை நாளை வருபவனா?
ஆள் மட்டும் மாறி மாறி..
இவளின் கேள்விக்கான
பதில் மட்டும் வராமலே!
ஆண்டுகள் போகப் போக
பெற்றோர்/சுற்றத்தாரை
எரிந்து விழுதல்!
படைத்த ஆண்டவன் தான்
காரணமென புலம்புதல்!
வாழ்க்கையில் பிடிப்பற்று
உற்சாகமின்றி
தன்னைத் தானே
நொந்து கொள்ளுதல்!
அகத்தைப் போல் முகத்திலும்
வறட்சியின் கடுகடுப்பு!
வார்த்தைகளில் சில
கருத்துப்பிழை!
வேலைகளில் தடுமாற்றங்கள்!
எல்லாமே முக முற்றலின்
மாயாஜால வேதிவினைகள்!
பருவத்தே பயிர்செய்!
பெண்ணுக்கு மட்டும் தானா?
ஆணுக்கு வயது
அடிப்படையில்லையா?
மனைவி பறி கொடுத்தவன்
மனைவியிடம்
விவாகரத்து வாங்கியவன்!
1(அ)2 குழந்தைகளுக்கு அப்பன்
கிழவயதுக்காரன்
இவர்களுக்கு இவளின்
முதிர்கன்னி வயது
முக்கியமில்லை!
50 பவுன் நகை/பைக்
இவளோடு வந்தால் போதுமாம்!
இத்தனை நாள் பெண்ணை
வீட்டிற்குள் வைத்திருந்ததற்கான
தண்டனையா (அ) அபராதமா?
இவளின் தன்னம்பிக்கை
கொஞ்சம் கொஞ்சமாய்
சமூகத்தின் பரிதாப/ஏளனப்
பார்வையில் சின்னாபின்னமாகி/
குடும்ப இதயங்களை
மொத்தமாய் கட்டி உதைக்கிறது!
பூமியில் பெண்ணென்று
பிறப்பெடுப்பது
பெரும் பாக்கியமாம்!
இவளும் பிறப்பெடுத்த
பாக்கியசாலி தானே!
ஆசைகளோடு அரும்பாகி
மலர்ந்த மகாலட்சுமி தானே!
புரிந்து கொள்ளாதது
பூமியின் தவறா?
வதனம் பாராமல்
சீதனம் பார்க்கும்
சமூகத்தின் இழுக்கா?
காதோர வெள்ளிக்கம்பிக்கு
இவளின் ..
மெத்தை மொழியறிய
வித்தை கலையறிய
பொல்லாத இம்சைகளை
தானாக வந்து விழும்
ஆசைகளை நீரூற்றி
தினம் தினம்
அணைத்துக் கொண்டிருப்பது
சொல்லாமலே தெரியுமா?
எந்நேரம் என் நேரம்?
கேள்வி மட்டும் இவளிடம்!
அவளுக்கு ..
அன்பு பரிசாக தாஜ்மகால்
கட்டும் ஷாஜகான் வேண்டாம்!
அன்புடன் பேசி வாழ்வு தரும்
இஸ்மாயிலின் குடிசை போதும்!
குதிரையில் கவர்ந்து செல்லும்
பிரித்விராஜ் தேவையில்லையாம்!
ஆசையுடன் வாழ வைக்கும்
பிலிப்..ன் சைக்கிள் போதுமாம்!
கானகத்துக்கும் துணை
கண்ட சீதாராமன் வேண்டாமாம்!
மாற்றான் மனைவியை கூட
மதித்த இராவணன் ok வாம்!
முதலில் நிற்கப் போவது
இவள் மூச்சா?
மாதவிடாய் சுழற்சியா?
இவளின் எந்த
கேள்விக்கும்
நம்மால் பதில் தர
முடியுமா?
அடுத்த பிறவி காணும்
பெண்களாவது
முதிர்கன்னி பதவி
அடையாமல் போகட்டும்!
அவர்கள் மீதுள்ள பரிவுடன்...
என் தோழிகள்
மஹமுதா
கஜலட்சுமி...இருவருடன்...
இன்னும் உலகத்திலுள்ள
அத்தனை முதிர்கன்னி
சகோதரிகளுக்கும்
முதிர்கன்னி தின வாழ்த்துகளை
உங்களோடு பகிரும்
சகோதரி
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
Msc.,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,
முதுநிலை ஆசிரியை,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை..632513.
9940739728.
Comments
Post a Comment