வாட்டம் போக்க வருக... வடிவுடை அம்மா வருக ... 38-ஆம் நாள் யுத்தம் -கவிஞர் ச.இலக்குமிபதி.

38-ஆம் நாள் யுத்தம் 



 வாட்டம் போக்க வருக! வடிவுடை அம்மா வருக!! பூமியிலே ஆதியிலே தோன்றிய முதல் சிவ ஸ்தலம் இதுவாகும்!


படைப்புக் கடவுள் பிரம்மாவும் காக்கும் கடவுள் திருமாலும் இவ்வாலயம் வந்து நினைத்ததை முடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடம் திரும்பி இருக்கிறார்கள்!


இருபத்தேழு நட்சத்திரங்களும் வந்து தொழுது இங்கே சிவலிங்க ரூபத்தில் காட்சி கொடுக்கும் பேறு பெற்றிருக்கிறார்கள்!


தேவார மூவர்கள் இவ்வூர் ஆலய ஈசன் புகழ்பாடி பதிகங்கள் பல அருளி பரமானந்தம் அடைந்திருக்கிறார்கள்!


சங்கீத மும்மூர்த்திகளில் முத்துசாமி தீட்சிதர் வந்திருக்கிறார்! தியாகராஜசுவாமி வந்து அம்மன் மீது கீர்த்தனைகள் பாடி மகிழ்ந்திருக்கிறார்! பட்டினத்தார் இங்கு வந்து ஒரு தனி கரும்புடன் ஒரு வரமும் பெற்று யாத்திரை தொடங்கி இருக்கிறார்!


நிறைவில் சுவாமி சன்னிதி எதிரில் முக்தி பெற்று சமாதி ஆகி இருக்கிறார்! சென்னையில் வாழ்ந்திருந்த காலம் வரை வள்ளலார் இவ்வாலயம் வந்து தரிசனம் செய்து பரமசுகத்தில் தன்னை மறந்து இருக்கிறார்! அம்மன் அருள் கிடைக்கப்பெற்று இந்த மண்ணில் மகான் தோப்பா சாமியும் வாழ்ந்திருக்கிறார்!


கலியநாயனார் ஒற்றியூர் கோவிலில் திருவிளக்கு பூஜை செய்து இங்கு முக்தி அடைந்திருக்கிறார்!


அகத்தியருக்கு திருமணக் காட்சியை அம்மையப்பர் கொடுத்து அருளியிருக்கிறார்! சுந்தரருக்கும் சங்கிலிக்கும் தன் முன்னிலையில் மகிழ மரத்தடியில் முக்கண்ணன் திருமணத்தை நடத்தியும் வைத்திருக்கிறார்!


அருணகிரிநாதரும் கூட ஒற்றியூர் வந்து பேரருள் பெற்றிருக்கிறார்! இந்த ஆலயத்தில் அம்மன் இருவர் வட்டப்பாறை அம்மன் வடிவுடையம்மன் என்று!


சுவாமி இருவர் ஆதிபுரீஸ்வரர் திருவொற்றியூர் ஈசன் என்று! தியாகராசர் உற்சவ மூர்த்தியாய் இங்கு! திருக்குளங்கள் இரண்டு! ஸ்தல மரங்கள் அத்தி மகிழம் என இரண்டு!


திருவெற்றியூர் தியாகராசர் ஆலயத்தில் தினம் வந்து வள்ளலார் அருள் பெற்று வென்று இருக்கிறார்! அருள் கலந்து அம்மன் அவருக்கு அன்னம் கொடுத்து மகிழ்ந்ததை வள்ளலார் திருவருட்பாவில் பதிவு செய்து மனம் நெகிழ்ந்து இருக்கிறார்!



திருவெற்றியூர் ஆலய பெருமையினை ஓரிரு பக்கங்களில் அடக்கவா முடியும்! இன்று கொரானா கொடுமைக்கு தீர்வு ஒன்று காண ஆலயம் அருகே வந்து நிற்கிறோம்!


அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் தான் ஞானசக்தி ரூபினியாய் அன்னை வடிவுடை அம்மனாய் அகிலம் காத்து நிற்கிறார்!


இங்கு அம்மன் நின்ற கோலமா இல்லை நடக்க திருவடி எடுத்து முன் வைக்கும் அழகு கோலமா! அப்பப்பா! நான்காயிரம் கண்கள் வேண்டும்!


வடிவுடையம்மன் பேரழகை மொத்தமாய் தரிசித்து முடிப்பதற்கு! அன்னையே அகிலாண்ட ஈஸ்வரியே இடுக்கண் எம்மை இடிக்கும்போது உன் திருவடிகளில் விழ்வது தான் ஒரே வழி!


விடாமல் துரத்தி துரத்தி துன்ப வலைவீசி பிடிக்கிறான் கொரானா எனும் அசுரன்! மகிஷாசுரனை வதம் செய்ததை நவராத்திரி தோறும் நயமுடன் பாடி மகிழ்ந்திருக்கிறோம்!


திரிபுரம் எரித்தவனின் சக்தி நீயே! திரிபுர சுந்தரியே! சக்தி இல்லையேல் சிவம் இல்லை சிவசக்தி ரூபிணியே! முக்கண்ணி பார்வதியே! அச்சம் அருகில் ! அபயம் நீயே அம்மா!        


 உன் திருவிழிகளின் ஈரம் எங்கள் சோகங்களை கழுவட்டும்!     


உன் சூலத்தின் கோபத்தில் கோவிட் சாம்பலாகி போகட்டும்!


காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என தன் மகன் மருதவாணன் எடுத்துரைத்ததற்கு பின்னால் பட்டினத்தார் புரிந்துகொண்டார் வாழ்க்கை என்னவென்று!


அவர் இப்போது உன் அருளைப் பெற்று உன் ஆலயத்திற்கு முன்னால்தான் சமாதியாகி நிலையாமையின் உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்!



யார் சொல்வது இந்த உண்மையை வைரஸ் அனுப்பி வைத்த அந்த 
அற்பர்களுக்கு!


அனைவரையும் அழித்து விட்டு அவர்கள் மட்டும் எத்தனை காலம் இந்த மண்ணில் வாழ்ந்து விடப்போகிறார்கள்!


ஆன்மீக பூமியாம் பாரதத்தின் கலாச்சாரம் அறியாத மூடர்கள்! ஆண்டவனுக்கு சிறிதும் அச்சப்படாத அநியாயக்காரர்கள்!


கொரானாவின் பிடி இன்று உலகின் கழுத்தை இறுக்கிக் கொண்டு இருக்கிறது! நல்லவரை காப்பாற்ற நஞ்சை உண்டான் உன் ஈஸ்வரன்!


விஷத்தை உள்ளே இறங்க விடாமல் ஈஸ்வரன் கண்டத்தில் அதை நிறுத்தி ஈஸ்வரனையே நீலகண்டன் ஆக்கிய சர்வேஸ்வரி நீ!ஜெயித்துக் காட்டும் ஜகன்மாதா நீ !


உனது திருக்கரங்களுக்கு மட்டுமே எங்களை கொல்லவரும் கொரானாவின்
 கழுத்தை கிள்ளி வீசும் சக்தி இருக்கிறது!



கொஞ்சம் கூட அச்சப்படாமல் கொரானா இங்கே கொக்கரித்து திரிகிறது தாயே!


அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அப்படியே மிரண்டு போய் கிடக்கின்றன தாயே!


 அன்னை வடிவுடையம்மன் முன்னால் மண்டியிட்டுக் கிடக்கும் எங்கள் முன்னால் மட்டும் உன்னால் வரமுடியாது கொரானாவே!


லட்சக்கணக்கில் மக்களை பிடித்து உருக்குலைத்து அலைய வைக்கும் கோவிட்டே! இனியும் உன் அராஜகம் தொடர விடமாட்டாள் எங்கள் அன்னை!


எங்களை இனியும் உன்னை தொட விட மாட்டாள் எங்கள் அன்னை! வாட்டம் போக்க வருக! வடிவுடை அம்மா வருக!!



இப்படிக்கு வாரியார்தாசன் கவிஞர் ச.இலக்குமிபதி வேலூர்-9


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.