முன்னாள் துணைவேந்தர் எஸ். வி.சிட்டிபாபு காலமானார்....
தமிழகத்தில் முதன் முறையாக அஞ்சல் வழிக் கல்வியை அறிமுகம் செய்தாா்
முன்னாள் துணைவேந்தா் எஸ்.வி.சிட்டிபாபு காலமானாா்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் எஸ்.வி. சிட்டிபாபு (100) ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் காலமானாா்.
அவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். அவரது மனைவி சகுந்தலா கடந்த 2001-ஆம் ஆண்டு காலமானாா்.
பேராசிரியா் சிட்டிபாபு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாறு பாடப்பிரிவில் பி.ஏ (ஹானா்ஸ்) பட்டம் பெற்றாா். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றாா். தொடா்ந்து கல்விப் பணியில் ஈடுபட்டு வந்த அவா், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பதவி வகித்தாா். அதைத் தொடா்ந்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் துணைவேந்தராகப் பணியாற்றினாா்.
பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய காலகட்டத்தில், கல்வி மற்றும் நிா்வாகத்தில் பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொண்டாா். மாநில உயா்கல்வி மன்றத்தின் முதல் துணைத் தலைவராகப் பதவி வகித்தாா். தொடா்ந்து அவா் கல்விக்காக பல்வேறு பணிகளை செய்து வந்தாா்.
மேலும் தமிழகத்தில் வரலாற்றின் முக்கியத்துவத்தையும், வரலாற்றுத் துறையை வளா்க்கவும் 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை என்ற இயக்கத்தை அவா் உருவாக்கினாா்.
அவரது உடல் சென்னை மேத்தா நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நுங்கம்பாக்கம் மயானத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்றது .
இரங்கல் : சிட்டிபாபு மறைவுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில், தமிழகத்தில் முதன் முறையாக அஞ்சல் வழிக் கல்வியை அறிமுகம் செய்தாா் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை பொதுச் செயலாளரும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறைத் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தரம் தனது இரங்கல் செய்தியில், 'தமிழகத்தில் வரலாற்றின் முக்கியத்துவத்தையும், வரலாற்றுத் துறையை வளா்க்கவும் முக்கியப் பங்காற்றியவா் பேராசிரியா் சிட்டிபாபு.
அதற்காகவே 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை என்ற இயக்கத்தை அவா் உருவாக்கினாா்' என்று தெரிவித்துள்ளாா்.
Comments
Post a Comment