சிவபெருமானாரை வணங்குவதாலும், சிவ வழிபாட்டினாலும் நாம் பெறும் நலன்கள்
சிவபெருமானாரை வணங்குவதாலும், சிவ வழிபாட்டினாலும் நாம் பெறும் நலன்கள்
முதன்முதலில் பதிகத்தை சொல்லி அதனால் நாம் பெருமானுடைய அருளைப் பெறலாம் என்று வழிவகுத்தவர் காரைக்கால் அம்மையார்.
சிவபெருமானே தன்னுடைய அம்மை என்று சொல்லக்கூடிய அருமை பாடுடையவர் காரைக்கால் அம்மையார்.
சிவபெருமானாரை வழங்குவதாலும் சிவ வழிபாடு செய்வதாலும் கிடைக்கும் மூன்று பயன்களை சொல்லி இருக்கின்றார் அவை பார்ப்போம்..
(1)பிறவி இனி வாராது ஒழியும்
"யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்..
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்..
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற..
அம்மானுக்கு ஆளாயி னேன்."
- காரைக்கால் அம்மையார்.
-அற்புதத் திருவந்தாதி
சிவபெருமானாரை வணங்கவும், அவருக்குத் தொண்டு செய்யவும்
ஆளானதே பெரும் புண்ணியம், பல பிறவிப் புண்ணியம் இருந்தால்தான்
இப்பேறு கிட்டும். இதனால் இனிப் பிறவி இல்லாமல் போகும்.
(அம்மையார் பெற்றதைக் கூறியுள்ளதன் காரணம் நமக்காகவே)
2. எமன் தூதர்கள் நம்மிடம் வரமாட்டார்கள்
"காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்..
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல..
அரணார் அவிந்தழிய வெந்தியம் பெய்தான்..
சரணார விந்தங்கள் சார்ந்து."
- அற்புதத் திருவந்தாதி
(காலன் - எமன், கைகழன்றோம் - விடுபட்டோம்; கோல அரணார்
- சிவபெருமானார்; மேலை - பழைய; சரணார விந்தங்கள் - பாதங்கள்)
சிவ பெருமானாரை வழிபடும் அன்பர்களிடம் எமன் தூதர்கள்
வரவே மாட்டார்கள், தேவ தூதர்கள் வருவார்கள்.
சஞ்சிதவினை அல்லது பழவினை வேருடன் அழிந்து ஒளியும். பழைய
வினை இல்லையானால் பிறவியும் இல்லையாகும்.
நரகம் (துன்பம், என்பது இல்லாமல் போகும். சிவலோக வாழ்வு கிட்ட
என்றும் இன்பமாய் வாழலாம
(3)நாமாலையும் (பாடல்) பூமாலையும் கொண்டு வழிபட்டால் தீவினைகள் அழிந்தொழியும்
"நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே..
பூமாலை கொண்டு புனைந்தன்மாய் - நாமோர்..
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே..
எறிவினையே என்னும் இருள்."
- அற்புதத் திருவந்தாதி
(நாமாலை - நாவினால் மாலை தொடுத்தல் - சொல் மாலை;
புனைந்து - தொடுத்து (கட்டி); அறிவு - சிவமே நமக்குப் பொருள் என்று
எண்ணுதல், அழுதல் - வருந்துதல்; எறி- தாக்குகின்ற; இருள் - துன்பம்)
தமிழ் வேதப் பாடல்கள் பாடியும், மலர்மாலை தொடுத்தும் சிவத்
தொண்டு செய்யும் அன்பர்கட்கு, சிவமே நமக்குப் பொருள் எனும் அறிவு மேலிடும் (உணர்வு மிகும்).
இதனால் முன்பு செய்த தீய வினைகள் நம்மை ஒன்றும் செய்யாது அகலும்,
நான்காம்
நூற்றாண்டிலேயே
முழுமுதற் பொருளாம்
சிவபெருமானாரைத் தீந்தமிழ்ப் பாடல்களால் வழிபடும் வழியை அமைத்துத் தந்தவர் காரைக்காலம்மையார்.
“கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே என்கு அரியது ஒன்று"
- அற்புதத் திருவந்தாதி
முழுமுதல் பொருளாக (பிரானாக)க் கண்ட அம்மையாருக்கு அரியது
(பெற முடியாதது) என்று ஒன்றுமில்லை. என்றும் இறைவருடைய
திருவடிக் கீழ் இன்பற்றிருக்கும் நிலையைப் பெற்றார்.
நாமும் அம்மையார் காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அவர் பெற்ற பேற்றை நாமும் பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment