குழந்தை வரம் அருளும் அழகு முத்தையனாரப்பன் ஆலயம்
குழந்தை வரம் அருளும் அழகு முத்தையனாரப்பன் ஆலயம்
➖➖➖➖➖➖➖➖➖
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் கிராமத்தில் கோட்டை சுவர் போன்று வளர்ந்து நிற்கும் ஆலமரங்களுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அழகு முத்தையரனாரப்பன் ஆலயம் மற்றும் அழகு சித்தர் ஜீவ சமாதி ஆகியவை அமைந்துள்ளன.
தல வரலாறு
சிவன், விஷ்ணுவிற்கு (விஷ்ணுவின் மோகினி அவதாரம் மூலமாக) அவதார புத்திரனாக பிறந்தவர் ஐயனார். புராண வரலாறுபடி சிவன் விஷ்ணு திருவிளையாடல் நடைபெற்றது புதுவை கீழ்புத்துப்பட்டு ஐயனார் கோயில் என்றாலும், இந்த தென்னம்பாக்கத்தில் தான் ஐயனார் வளர்ந்து தக்க பருவத்தை அடைந்து வீரதீர செயல்கள் புரிந்து அதன் மூலம் பூரணி பொற்கலையை மணந்தார் என்று கூறுப்படுகிறது. இந்த கோயிலின் மூலவர் அழகு முத்தையனாரப்பன் பூரணி மற்றும் பொற்கலையை மணந்து தம்பதியர் சமேதராக அமர்ந்தபடி ஊரை பாதுகாத்து வருகின்றார். இவருக்கு வலது பக்கத்தில் காவலாளியாக கம்பீர பலத்துடன் வீரபத்திர சுவாமி அமர்ந்துள்ளார். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை சீட்டாக எழுதி ஐயனாரின் கத்தியில் கட்டி வேண்டிக்கொள்வதன் மூலம் அவை நிறைவேறி வருவதாக கூறுகின்றனர். அழகு முத்தையனார் பில்லி, சூனியம் மற்றும் குழந்தை வரம் அருள்பவராக விளங்கி வருகிறார்.
அழகு சித்தர்
முத்தையனார் கோயிலுக்கு பக்கத்தில் அழகுசித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது. இவருக்கும் ஐயனார் கோவிலுக்கும் நெருங்கிய கதை உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர் ஒருவர் இந்த ஊருக்கு வந்து தவம் செய்துள்ளார். இவர் ஒவ்வொரு திங்கட்கிழமை யும் விரதம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு திங்கட்கிழமை ஊர் மக்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் கிணற்றுக்குள் இறங்கி ஜீவசமாதி அடைந்தார்.
இதனால் இந்த கிணற்றுக்கு பால், பன்னீர் போன்ற திரவியங்களால் மக்கள் அபிஷேகம் செய்து வந்தனர். பிற்காலத்தில் அந்த கிணற்றுக்கு மேலே அபிஷேக திரவியங்கள் போகும் அளவிற்கு மூன்று துவாரமிட்டு கற்களால் மேடை அமைக்கப்பட்டது. அந்த கிணறே தற்போது மூலஸ்தானமாக விளங்குகிறது. சித்தர் ஜீவ சமாதியான சித்திரை மாதம் முதல் திங்கள் திருவிழா தினமாகவும், குருபூஜை தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு தல விருட்சமாக ஆலமரம் விளங்கி வருகின்றது. இந்த கோயில் வளாகத்தில் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. பிரதோஷ தினங்களில் லிங்கத்திற்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அழகு முத்தையனார் ஆலயத்தின் நேர்எதிர் கிழக்கு திசையில் துர்க்கையம்மன் சுயம்புவாக காட்சி தருகின்றார்.
சிலை கோயில்
இந்த கோயிலுக்கு மற்றொரு சிறப்பு லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் அமைந்திருப்பது. அதனால் சிலை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை வரம் பெற்றவர்கள் குழந்தை பொம்மையும், திருமண வரம் வேண்டியவர்கள் மணமக்கள் பொம்மையும், பள்ளிக்கூடம், மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் உருவச் சிலையும், வீடு வேண்டியவர்கள் வீட்டு சிலையும் இங்கு கொண்டுவந்து வைக்கின்றனர். கோயில் முன்புறம் உள்ள குதிரை சிலைகள் பல நூற்றாண்டுகள் கடந்தவை. குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சித்தர் சமாதிக்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. சித்தர் பெருமான் ஜீவ சமாதி அடைந்த காரணத்தினால் அழகு முத்தையனாருக்கு உயிர் பலியிடுதல் வழக்கம் இல்லை. மாறாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது.
செல்வது எப்படி
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து கன்னி கோயில் மற்றும் பாகூர் வழியாகவும், தூக்கணம்பாக்கம் வழியாகவும் தென்னம்பாக்கம் செல்லலாம். புதுச்சேரியில் இருந்து தவளக்குப்பம் வழியாக ஏம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் 2 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது.
Comments
Post a Comment